சென்னை ஆலந்தூர் பகுதிகளில் கஞ்சா விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்துவருவதாக புனித தோமையார் மலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் ராஜலட்சுமிக்குத் தகவல் கிடைத்ததுள்ளது. இத்தகவலின் அடிப்படையில் ராஜலட்சுமி தலைமையில் எட்டு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு ஆலந்தூர் பகுதி முழுவதும் தீவிர தேடுதலில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஆலந்தூர் ஆசர்கான பகுதியில் வேகமாக ஒரு சரக்கு லாரி வந்துகொண்டிருந்தது. அந்த லாரியின் மீது சந்தேகம் ஏற்பட்டதால் காவல் துறையினர் அதனை நிறுத்தி வாகனத்திலிருந்த நான்கு நபர்களிடம் விசாரணை செய்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பேசியதால் சந்தேகம் அதிகரித்தது.
இதையடுத்து, சரக்கு லாரியை காவல் துறையினர் சோதனை செய்தனர், அப்போது அதில் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
மேலும் அந்த சரக்கு லாரியும், அந்த நான்கு பேரையும் புனித தோமையார் மலை காவல்நிலையத்தில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அந்த லாரியில் 330 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. பின்பு கைது செய்த நான்கு பேரும் செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த முரளி (34), மகேஷ் (35), முத்துகிருஷ்ணன் (34), திண்டுக்கல்லை சேர்ந்த மகுடீஸ்வரன் (35) என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்திவந்தது தெரியவந்தது.