நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா ஒரடிஅம்பலத்தைச் சேர்ந்தவர் விவேக் ரவிராஜ். காவல் உதவி ஆய்வாளரான இவர் 2017ஆம் ஆண்டு மணல்மேடு காவல் நிலையத்தில் பணியாற்றியபோது மணல்மேடு காவல் சரகத்திற்குள்பட்ட இளம்பெண் ஒருவரிடம் ஃபேஸ்புக் மூலமாக நட்பு ஏற்படுத்திக்கொண்டார்.
இந்த நட்பு நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியது. அவர்களது வரம்பு கடந்த நெருக்கத்தால் அப்பெண் கருவுற்றதாகத் தெரிகிறது. இதனையடுத்து, காவல் உதவி ஆய்வாளர் விவேக் ரவிராஜிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி அப்பெண் வற்புறுத்திக் கேட்டுள்ளார்.
ஆனால், அதற்குப் பதிலளிக்காத ரவிராஜ் அப்பெண்ணைக் கட்டாயப்படுத்தி கருவை கலைக்க முயற்சித்துள்ளார். இதற்கு அப்பெண் உடன்படாததால் விவேக் ரவிராஜ் தனது தாயார் ராஜாத்தியை அழைத்து அப்பெண்ணின் வீட்டிற்குச் சென்று பேசியுள்ளார்.
"கருவைக் கலைத்தபின் எனது மகன் விவேக் ரவிராஜ் உன்னை திருமணம் செய்துகொள்வான்" என்று கருவை கலைக்க ராஜாத்தி கூறியுள்ளார். அதனை நம்பி அப்பெண் தனது கருவை கலைத்தார். இதன்பின் அப்பெண்ணிடம் பேசுவதை விவேக் ரவிராஜ் தவிர்த்து வந்திருக்கிறார்.
அத்துடன், காதலித்த அந்த இளம்பெண்ணை ஆபாசமாகத் திட்டி திருமணம் செய்துகொள்ள மறுத்துள்ளார்.
இது குறித்து, காவல் துறை உயர் அலுவலர்களிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் பாதிக்கப்பட்ட பெண் விவேக்ரவிராஜிடம் நெருக்கமாக இருந்த புகைப்படம், விவேக்ரவிராஜ் மிரட்டும் கேளொலி (ஆடியோ) பதிவுகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். இந்தச் செய்தி மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பெண் வழக்குத் தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், உதவி ஆய்வாளர் விவேக் ரவிராஜ் மீது வழக்கு பதியச் சொல்லி உத்தரவிட்டது.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் நேற்று நாகை மாவட்டம் வலிவலம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் விவேக் ரவிராஜ், அவரது தாயார் ராஜாத்தி மீது மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் கோப்பெருந்தேவி வழக்குப்பதிவு செய்துள்ளார்.
இதையடுத்து, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அப்பெண், "என்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றி, அதன் விளைவாக ஏற்பட்ட கருவை வலுக்கட்டாயமாக கலைக்கவைத்து மோசடி செய்து திருமணம் செய்துகொள்ள மறுத்து பல தொல்லைகள் கொடுத்த காவல் உதவி ஆய்வாளர் விவேக் ரவிராஜ் மீதும், அவரது தாயார் ராசாத்தி மீதும் 17 மாதங்களுக்கு பிறகு மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி விவேக் ரவிராஜ் மீது ஏமாற்றுதல், ஆபாசமாகத் திட்டியது, கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக 417, 420, 294(பி), 312, 506(2) ஆகிய 5 பிரிவுகளின் கீழும், அவரது தாயார் ராசாத்தி மீது 107, 120 ஆகிய பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர்களிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தி இதுதொடர்பான வழக்குகள் அனைத்தையும் பதிவுசெய்வதாக மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தகவல் தெரிவித்துள்ளார். அவ்வாறு செய்யாவிட்டால் அதையும் உயர் நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்று வழக்குத் தொடுப்பேன்.
கடந்த 2 நாள்களாக காவல் நிலையத்திற்கு வந்து செல்லும்போது என்னை கார், சரக்கு வாகனங்களில் வந்து கொலைசெய்ய முயற்சிசெய்தனர். எனது உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு காவல் உதவி ஆய்வாளர் விவேக் ரவிராஜ், அவரை சார்ந்தவர்களே காரணம்" எனக் கூறினார்.