நாமக்கல், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இரவு நேரங்களில் பயோ டீசல் என்ற பெயரில், கலப்பட டீசல்ஆந்திரா, சென்னை உள்ளிட்ட பகுதிகளிலிருந்துடேங்கர் லாரிகளில் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் மூலம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜிடம் இது குறித்து புகார் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் வழங்கல் துறை அலுவலர்கள் ஆகஸ்ட் 28ஆம் தேதி இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது நாமக்கல், வள்ளிபுரம் புறவழிச்சாலையில் ஒரு மறைவான பகுதியில் ஒரு கும்பல்,டேங்கர் லாரியில் இருந்து வாகனங்களுக்கு டீசல் நிரப்பியதை அவர்கள் கண்டறிந்தனர்.
அப்போது, அலுவலர்களைக் கண்ட அந்தக் கும்பல், வாகனங்களை விட்டு விட்டு தப்பிச் சென்றது. இதனையடுத்து அங்கிருந்த மூன்று டேங்கர் லாரிகளை அலுவலர்கள் பறிமுதல் செய்ததுடன் லாரியில் இருந்த 3,500 லிட்டர் கலப்பட டீசலையும் கைப்பற்றினர். மேலும், இதில் தொடர்புடைய செம்பாறைபுதூர் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி என்பவரைக் கைது செய்த நாமக்கல் குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
பயோ டீசல் என்ற பெயரில் கலப்பட டீசல் விற்பனை இந்த விசாரணையில், ஆந்திரா, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் கலப்பட டீசலை பயோ டீசல் எனக் கூறி, லிட்டர் டீசல் 60 ரூபாய் என விற்பனை செய்ததும், விலை குறைவாக இருக்கிறது என்பதற்காக நாமக்கல் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் இந்த மோசடி கும்பலிடம் டீசலைத் தொடர்ந்து வாங்கி வந்ததும் தெரிய வந்தது.
இந்நிலையில், கலப்பட டீசல் விற்பனையில் தொடர்புடைய நபர்கள் குறித்தும், தப்பியோடிய கும்பல் குறித்தும் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.