நாகர்கோவில் வடசேரி காவல் ஆய்வாளர் காளீஸ்வரி, தனிப்படை உதவி ஆய்வாளர் அனில் குமார் தலைமையில் வடசேரி பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் வந்த கார் ஒன்றை சோதனை செய்ய முற்றபட்டபோது, காவலர்களை பார்த்ததும் 2 நபர்கள் தப்பி ஓடினர்.
இதையடுத்து காரில் இருந்த கட்டையன்விளை காமராஜர் நகரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (55), புததேரி பகுதியைச் சேர்ந்த சரவணன் (23), முத்துக்குமார் (33), திருநெல்வேலி விகே புரத்தை சேர்ந்த கார்த்திக் ராஜா, கருங்குளம் பகுதியை சேர்ந்த கண்ணன் (44) ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.
மேலும், காரில் சோதனை நடத்தியபோது 22 கிலோ கஞ்சா மற்றும் ஊசி மருந்து பாக்கெட்டுகள் இருந்தது கண்டறியப்பட்டது. இந்த ஊசி மருந்துகள் அனைத்தும் மருத்துவமனைகளில் வலி நிவாரணம் மற்றும் அறுவை சிகிச்சைக்காக பயன்படுத்தக்கூடியதாகும். இந்த கும்பல் போதைக்காக இவற்றை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து காரில் சிக்கிய 5 பேரையும் காவல் துறையினர் கைது செய்து, காரையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தப்பி ஓடியது நாகர்கோவிலை சேர்ந்த சேகர் மற்றும் சரத் என தெரியவந்தது.
இவர்கள் இரண்டு பேர் மீதும் ஏற்கனவே கொலை, கஞ்சா வழக்கு காவல் நிலையங்களில் உள்ளன. பின்னர் தப்பியோடிய சேகர் மற்றும் சரத் ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆசாரிப்பள்ளத்தைச் சேர்ந்த மரிய அற்புதம் என்பவர் மூலம் ஊசி மருந்துகள் கிடைத்தது தெரியவந்த நிலையில், அந்த நபரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.