தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா குளத்தூர் அருகே உள்ள தந்தை பெரியார் நகரில் வசித்து வந்தவர் சோலைராஜா(23). இவர் சூரங்குடி அருகேயுள்ள கல்லாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பேச்சியம்மாள் என்ற ஜோதியை(20) கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இருதரப்பு பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்துள்ளார்.
இருவரும் பட்டியலினத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் வெவ்வேறு பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்ததால் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆகவே இருவரும் அதே பகுதியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து அதில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை கத்தி அரிவாளுடன், காரில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று அவர்களைச் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியோடியுள்ளது.
தகவலறிந்து வந்த விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் ஜெபராஜ், குளத்தூர் காவல் ஆய்வாளர் ராமலட்சுமி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கொலை செய்யப்பட்ட இருவரது உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஜோதியின் தந்தை அழகிரி உள்பட உறவினர்கள் ஆறு பேர் சேர்ந்து இந்த படுகொலையைச் செய்ததாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து குளத்தூர் காவல்துறையினர் அளித்த புகாரின் பேரில் அழகிரி உள்பட ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர்.
மேலும் அசம்பாவிதங்களைத் தடுக்கும்பொருட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் காவலர்கள் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் கல்லாங்குளத்தில் பதுங்கியிருந்த அழகிரியைத் தூத்துக்குடி மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முத்தமிழ் தலைமையிலான காவல்துறையினர் சுற்றிவளைத்துக் கைதுசெய்தனர். அதேசமயம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த சோலை ராஜா - ஜோதியின் உடல்களைப் பிரேதப் பரிசோதனை செய்வதற்கு மறுப்பு தெரிவித்து காலை முதல் இரவு 7.30 வரை போராட்டம் நடத்தி வந்தனர். அவர்கள், சோலை ராஜாவின் தங்கைக்கு அரசு வேலை வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், குற்றவாளிகளைக் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கவேண்டும் என வலியுறுத்தினர்.
தூத்துக்குடியில் இரட்டை கொலை..! குற்றவாளிகளை கைது செய்யப் போராட்டம்! இதையடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வந்த மாவட்ட உதவி ஆட்சியர் சிம்ரான் ஜித் கலோன் சிங், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார், துணை கண்காணிப்பாளர்கள் பிரகாஷ், முத்தமிழ், தாசில்தார் ஜான்சன் தேவசகாயம் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
நீண்டநேர இழுபறிக்குப் பின்னர் பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கைகளை ஏற்பதாக உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து சோலைராஜா-ஜோதியின் உடல்களைப் பிரேதப் பரிசோதனை செய்வதற்கு உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து இருவரின் உடல்களும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி உடற்கூறாய்வு கூடத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இருவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு நாளை உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.