திருநெல்வேலி மாவட்டம் மானூர் சுப்பையாபுரம் சந்திப் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர்கள் முருகன்(60), வேல்தாய்(50) தம்பதி . இவர்களுக்கு கலைச்செல்வன் (26) என்ற மகன் உள்ளார். முருகன் அவரது மகன் இருவரும் கூலி வேலை செய்து வரும் நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த வைசுமுருகன் என்பவர் முருகன் நிலத்தில் அத்துமீறி மணல் அள்ளியதாகவும் இதுதொடர்பாக இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்னை இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் வைசுமுருகன் மீது முருகன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வைசுமுருகன் கடந்த செப்-22ஆம் தேதி முருகனின் வீட்டிற்குச் சென்று அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் முருகன் அவரது மகன் கலைச்செல்வன் ஆகிய இருவரையும் வைசுமுருகன் மற்றும் அவரது ஆறு மகன்கள் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், முருகன் திடீரென விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்ட உறவினர்கள் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இதற்கிடையில் தங்கள் விவகாரத்தில் மானூர் காவல் துறையினர் வைசுமுருகனுக்கு ஆதரவாக ஒருதலைபட்சமாக செயல்பட்டு, தன்னையும் தனது தந்தையையும் சரமாரியாக தாக்கியதாக கலைச்செல்வன் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்த புகாரில் அவர், நானும் எனது தந்தையும் கடந்த 22ஆம் தேதி வீட்டில் இருந்தபோது வைசுமுருகனும் அவரது ஆறு மகன்களும் வந்து என்னையும் எனது தந்தையும் சரமாரியாக தாக்கினார்கள். பின்னர் மானூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாடசாமி, ஏட்டு சீனிவாசன் ஆகிய இருவரும் வந்து, வைசுமுருகன் மீதே புகார் கொடுக்கிறியா என்று கூறி எனது தந்தையை சரமாரியாக தாக்கினார்கள். தடுக்க முயன்ற என்னையும் அடித்தனர், ஷூ காலால் எட்டி உதைத்து இனிமேல் வைசுமுருகன் மீது புகார் கொடுத்தால் காவல் நிலையம் அழைத்து சென்று உன்னை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்று விடுவேன் என்று மிரட்டினார்.
இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த எனது தந்தை முருகன் திடீரென விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். தற்போது அவர் பாளையங்கோட்டை அரசு மருத்துமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே எனது தந்தையின் தற்கொலை முயற்சிக்கு காரணமாக இருந்த மானூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர், காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் தற்போது வரை காவலர்கள் யாரும் மருத்துவமனைக்கு சென்று அவரிடம் விசாரணை நடத்தவில்லை. ஏற்கனவே சாத்தான்குளம் சம்பவத்துக்கு பிறகு காவலர்கள் மீது பொதுமக்கள் மத்தியில் ஒருவித அவப்பெயர் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது திருநெல்வேலியில் காவலர்கள் தாக்கியதால் ஏற்பட்ட மன உளைச்சலில் கூலித்தொழிலாளி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படும் சம்பவம் பொதுமக்களிடையே மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பணம் நெருக்கடி: பிள்ளைகளை கொலைசெய்த தந்தை கைது!