கடலூர் மாவட்டத்தில் பெண்ணாடம் மற்றும் ஏ சித்தூர் கிராமத்தில் இயங்கி வரும் 'ஆருரான் மற்றும் அம்பிகா' தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்திடம் விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர், அரியலூர் உள்ளிட்ட பகுதிகளில் கரும்பு விவசாயிகளிடமிருந்து கரும்புகளை கொள்முதல் செய்து வந்தனர்.
இந்த நிலையில், இந்நிறுவனம் மூன்று ஆண்டு காலமாக கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை வழங்காமல் இழுத்தடித்து வந்தாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக, மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறக்கூடிய விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் நிலுவைத்தொகையை வழங்க மறுக்கும் ஆலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
இதனைத் தொடர்ந்தும் ஆலை நிர்வாகம் நிலுவைத் தொகை வழங்காததால், அந்த ஆலையை மூட வருவாய் துறை உத்தரவிட்டது.
அதனடிப்படையில், இரண்டாண்டுகளுக்கு முன்பு வருவாய் அலுவலர்கள் இந்த ஆலையைப் பூட்டி சீல் வைத்தனர். இதனால், நிலுவையில் உள்ள தொகைகளை திருப்பி அளிப்பதாகவும், அவர்கள் பெயரில் வாங்கிய வங்கிக் கடன்களை கட்டித் தீர்க்கப்படுவதாகவும் ஆலை நிர்வாகம் உத்தரவாதம் அளித்தது.
பண மோசடி:
இந்நிலையில், ஆரூரான் நிர்வாகத் தலைவர் ராம் தியாகராஜன் என்பவர் விருத்தாசலம் திட்டக்குடி ஆகிய பகுதிகளில் உள்ள எஸ்பிஐ வங்கிகளில் விவசாயிகள் பெயரில் கடன்களைப் பெற்று விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்கியுள்ளார்.
ஆனால், விவசாயிகள் பெயரில் உள்ள கடன்களை அந்த ஆலை நிர்வாகம் கட்டத் தவறியதால், விவசாயிகளுக்கு வங்கிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளன. இதனால், அதிர்ச்சியடைந்த விவசாயிகள் ராம் தியாகராஜன் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.
1500 விவசாயிகளை ஏமாற்றி 80 கோடி மோசடி செய்த தொழிலதிபர் கைது காவல் துறை விசாரணை:
இந்தப் புகாரினை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணனிடம் விசாரிக்கும்படி மாவட்ட ஆட்சியர் கொடுத்துள்ளார். அதன் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் ஆறு மாத காலமாக புகார் கொடுத்த விவசாயிகளிடமும், கடன் பெற்ற வங்கி அலுவலர்களிடமும் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதில், பெரும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 'ஆரூரான் அம்பிகா தனியார் சர்க்கரை ஆலை' நிர்வாக தலைவர் ராம் தியாகராஜன் கடலூர் மாவட்டத்தில் உள்ள 1500 விவசாயிகளின் பெயர்களில் எஸ்பிஐ வங்கியிடமிருந்து வாங்கிய கடன் தொகை 80 கோடி ரூபாய் என கண்டறியப்பட்டுள்ளது. இதனடிப்படையில், ராம் தியாகராஜனை கைதுசெய்துள்ள காவல் துறையினர், தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.