கோவை, காந்திபுரம், டாடாபாத் ஒன்பதாவது வீதியைச் சேர்ந்தவர் ஜோய். இவர் பல வருடங்களாக வீட்டு உள்அலங்கார வடிவமைப்புத் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவர், நேற்று முன் தினம் (செப்.15) ஆர்.எஸ்.புரம் பகுதியில் வசித்து வரும் தனது நண்பரிடம் இரண்டு லட்ச ரூபாய் பணம் வாங்குவதற்காக வந்துள்ளார். பணத்தை வாங்கிவிட்டு காரில் அமர்ந்தபடி தனது நண்பரிடமும் அவரது மனைவியிடமும் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.
அப்போது கையில் கத்தியுடன் அவ்வழியே வந்த இளைஞர் ஒருவர், ஜோயை எதிர்பாராத நேரத்தில் குத்தினார். இதில் நிலை குலைந்துபோன ஜோய், காரின் மற்றொரு பகுதியில் உள்ள கதவைத் திறந்து கீழே விழுந்தார். அப்போதும் விடாமல், அந்த நபர் ஜோயை கத்தியால் உடலின் பல பகுதிகளில் குத்தினார். இதில் பலத்த காயமடைந்த ஜோய் அலறித் துடித்தார். ஆனால் அருகில் இருந்த யாரும் உதவிக்கு வரவில்லை.