தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

சென்னை மக்களை மரண பீதிக்குள்ளாக்கும் மாஞ்சா

சென்னை: தடை சட்டம் அமலில் இருந்தாலும் தடையின்றி பறந்து கொண்டிருக்கின்றன மாஞ்சா நூல் பட்டங்கள். காவல் துறை தீவிரமாகக் கண்காணிப்பதாகக் கூறினாலும் பலரையும் காவு வாங்க காத்திருப்பதுபோல் தலைக்குமேல் பறக்கின்றன அவை. தீர்வு வருமா?

kites
kites

By

Published : Jun 12, 2020, 5:12 PM IST

சென்னையில் ஒரு நேரத்தில் வானத்தைப் பார்த்தாலே பறவைகள் போல் கூட்டம் கூட்டமாக பட்டங்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும். ஆனால், நாளடைவில் பட்டம் விடுவதில் ஏற்பட்ட போட்டிகளால், அது மாஞ்சா எனும் கொடிய கயிற்றைக் கொண்டு விளையாடும் விபரீதமாகிப்போனது. விளைவு... அப்பாவி மக்களின் உயிரையும், உடலுறுப்புகளையும் சிதைத்தது மாஞ்சா பட்டங்கள்.

இதனையடுத்து, கடந்த 2016ஆம் ஆண்டு மாஞ்சா நூலுக்கு தடை விதித்தது தமிழ்நாடு அரசு. ஆனால், தடை உத்தரவும் பட்டம் போல் காற்றில் பறந்து கொண்டே இருக்கிறது. நாளுக்கு நாள் மாஞ்சா நூலில் பட்டம் விடுவோரின் எண்ணிக்கையும், அதனால் ஏற்படும் தேவையற்ற மரணங்களும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

மாஞ்சா நூல் தடை செய்யப்பட்ட 2016ஆம் ஆண்டில், மாஞ்சா நூல் பயன்படுத்தியதற்காக சென்னையில் மட்டும் ஏழு பேரை கைது செய்த காவல் துறை, 2017ஆம் ஆண்டில் நான்கு பேரையும், 2018 இல் ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஒன்பது பேரையும் கைது செய்தது. தொடர்ந்து, 2019ஆம் ஆண்டில் 17 வழக்குகள் பதியப்பட்டு 25 பேரை கைது செய்ததாக காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது.

மாஞ்சா நூல் பட்டங்களை கண்காணிக்கும் காவல் துறை

இந்நிலையில், ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி இருந்ததால், தற்போது மாஞ்சா நூல் பட்டம் விடுவோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் அண்மையில் மூன்று வயது சிறுவன் உள்பட ஐந்து பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து, கடந்த ஆறு மாதங்களில் மட்டும் மாஞ்சா நூல் பட்டம் விட்டதாக 90 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வகை குற்றவாளிகளுக்கு மூன்று மாத சிறையும், 250 ரூபாய் அபராதமும் மட்டுமே வழங்கப்படுவதாகக் கூறும், மாஞ்சா நூல் மரணங்களை தடுப்பதற்காக கடந்த 1996ஆம் ஆண்டு முதல் போராடி வரும் சமூக ஆர்வலர் ஜெயராமன், குஜராத், மகாராஷ்டிரா போன்று ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க அதிகாரிகள் ஆலோசித்தும், முடிவு எதுவும் எட்டப்படாமல் இருப்பதாகவும் வருத்தம் தெரிவிக்கிறார்.

குற்றவாளிகளுக்கு கூடுதல் தண்டனை வழங்க வேண்டும் - சமூக ஆர்வலர் ஜெயராமன்

காவல் துறை பட்டம் விடுபவர்களை தொலைநோக்கி மற்றும் ட்ரோன் மூலம் கண்காணித்து நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் கூறினாலும், பயமேதுமின்றி மாஞ்சா நூல் பட்டங்கள் உயிர்களை பதம் பார்த்து கொண்டுதான் இருக்கின்றன.

பறிமுதல் செய்யப்பட்டுள்ள மாஞ்சா நூல் பட்டங்கள்

இதையும் படிங்க: 3 நாள்களில் 3 யானைகள் உயிரிழப்பு... நஞ்சு வழங்கப்பட்டதா என வனத்துறை விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details