சென்னை :சென்னை நொளம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில், ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மார்ச் மாதம் முதல் அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று பூட்டி இருக்கும் வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்தது.
இந்நிலையில், ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி, முகப்பேர் விஜிபி நகரில் வசிக்கும், சுதாகர் ரெட்டி என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 6 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. பக்கத்து வீட்டின் பூட்டை உடைத்தும் கொள்ளை முயற்சி நடந்தது.
இதேபோல், செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முகப்பேர் மேற்கு வெள்ளாளர் தெருவைச் சேர்ந்த கேஸ் ஏஜென்சி உரிமையாளர் செல்வி வீட்டில் 18 சவரன் நகை, 8 கிலோ வெள்ளி பொருள்கள் திருடு போனது.
இதற்கிடையில் கடந்த 25 ஆம் தேதி மென்பொருள் பொறியாளர் சுனில் என்பவர் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 20 சவரன் தங்க நகைகள், ரூ.7 ஆயிரம் பணம் மற்றும் வெள்ளி பொருள்களும் அடையாளம் தெரியாத நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது.
இவ்வாறு நொளம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுபவர்களை பிடிக்க அண்ணா நகர் தனிப்படை காவலர்கள், அந்தப் பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில், ஒரே கும்பல் இந்தத் தொடர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததும், அந்தக் கொள்ளைக் கும்பல் நொளம்பூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் தங்கியிருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை காவலர்கள், அந்த வீட்டிற்கு சென்று பார்த்த பொழுது, வீடு பூட்டி இருந்ததால் மூன்று நாள்களாக அந்த வீட்டை கண்காணித்து, அங்கு வந்த நபரை கைது விசாரணை நடத்தினர்.
விசாரணையில், இந்த தொடர் கொள்ளைகளில் ஈடுபட்டது, வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த பிரபல கொள்ளையன் ராஜன் (எ) காமராஜ் (44) என்பது தெரிய வந்தது.
மேலும் இவர் மீது சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், 100க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதும், கடந்த 2018 ஆம் ஆண்டு ஆவடியில் தன் கூட்டாளிகளோடு சேர்ந்து கொள்ளையில் ஈடுப்பட்டு கைதானதும், பிறகு காவலர்களிடம் சிக்காமல் பல இடங்களில் கைவரிசை காட்டி வந்ததும் தெரியவந்தது.
ராஜன் கும்பல், ஒரு பகுதியில் கொள்ளை அடிப்பதற்கு முன்பாக அப்பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி, அந்தப் பகுதிகளை முழுவதுமாக நோட்டம் விட்டு பின் கொள்ளை சம்பவங்களில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.