சென்னை அயனாவரத்தில் உள்ள தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக, அக்குடியிருப்பில் பணிபுரிந்த 17 பேரை போக்சோ சட்டத்தின்கீழ் காவல் துறையினர் கடந்தாண்டு ஜூலை மாதம் கைதுசெய்தனர். இவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார்.
17 பேர் மீதான குண்டர் சட்டத்தை இந்தாண்டு ஜனவரி 11ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் ரத்துசெய்த பின்னரும், 17 பேருக்கும் பிணை கிடைக்கவில்லை. இந்நிலையில் 17 பேருக்கு எதிரான வழக்கின் விசாரணையை, இந்தாண்டு ஜனவரி மாதம் மகளிர் நீதிமன்றம் தொடங்கியது. இவ்வழக்கில் அரசுத் தரப்பு சிறப்பு வழக்குரைஞராக ரமேஷ் நியமிக்கப்பட்டார். அதேபோல, குற்றஞ்சாட்டபட்ட 17 பேருக்கும் தனித் தனியாக வழக்குரைஞர்கள் முன்னிலையாகினர்.