திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே தடப்பெரும்பாக்கம் கூட்டுச் சாலையில் அடுத்தடுத்து உள்ள ஐந்து கடைகளின் பூட்டை உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துள்ளனர். இதில் டிவி, ஃப்ரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடை, மரவேலைப்பாடுகளை செய்யும் கடை, ஆயில் கடை என ஒரே வளாகத்திலிருந்த ஐந்து கடைகளின் பூட்டுகளை உடைத்து 2 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மற்றும் ரூ. 20ஆயிரம் ரொக்க பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.
மேலும், கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை அடித்து நொறுக்கி அதில் பதிவாகி இருந்த காட்சிகளையும் அவர்கள் சேதப்படுத்தி உள்ளனர். கொள்ளைச் சம்பவம் நடைபெற்றபோது தட்டிக்கேட்ட ஒருவரை வெட்டி விடுவோம் என மிரட்டித் தப்பிச் சென்றுள்ளனர். அவர்கள் முகமூடி அணிந்திருந்ததால் அவருக்கு அடையாளம் தெரியவில்லை.