திருச்சிராப்பள்ளி:விமான நிலைத்தில் ரூ. 46 லட்சம் மதிப்பிலான தங்கம் கடத்தி வந்த பயணியை கைதுசெய்து சுங்கத் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக, திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி போன்ற நகரங்களுக்கு மட்டுமே, உள்ளூர் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
எனினும் ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு வருவதற்காகவும், இந்தியாவில் சிக்கியுள்ள வெளிநாட்டினரை அவர்களது சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கும் வகையிலும், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் திருச்சியில் இருந்து துபாய், ஷார்ஜா, அபுதாபி, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற இடங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயக்கப்படும் விமானங்களில் தங்கம் கடத்தல் சம்பவம் அவ்வப்போது நடந்தேறிவருகிறது.
இத்தருணத்தில், துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலையத்தில் வான் நுண்ணறிவு பிரிவு அலுவலர்கள் சோதனையிட்டனர். அப்போது தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ஆசிக் என்ற பயணியிடம் இருந்து 46.75 லட்சம் மதிப்பிலான 905 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
தங்கம் கடத்தி பிடிப்பட்ட பயணி ஆசிக்கிடம் சுங்கத் துறை அலுவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.