திருப்பூர்:பனியன் நிறுவன உரிமையாளர் வீட்டில் கொள்ளையடித்த மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் எம்.எஸ்.நகரைச் சேர்ந்தவர் பனியன் நிறுவன உரிமையாளரான சீனிவாசன். சென்னையிலுள்ள மகனை பார்க்க இவரின் மனைவியும், மகளும் சென்றுள்ளார். இதற்கிடையே நவம்பர் ஒன்றாம் தேதி காலை சீனிவாசன் நடைபயிற்சிக்காக வெளியே சென்றுள்ளார்.
பின்னர் வீட்டிற்கு வந்த அவர், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக உள்ளே சென்று பார்த்த அவர், அலமாரி உடைக்கப்பட்டு உள்ளேயிருந்த 80 பவுன் நகை, ரூ.12 லட்சத்து 25 ஆயிரம் கொள்ளை போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்த திருட்டுத் தொடர்பாக தனிப்படை அமைத்த காவல் துறையினர், அங்குள்ள கண்காணிப்புப் படக்கருவியில் பதிவாகியிருந்த பதிவுகளை வைத்து வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்பதிவில் இருந்த வாகனத்தின் எண்ணைக் கொண்டு விசாரணையை துரிதப்படுத்தினர்.
அவ்விசாரணையில், சீனிவாசனின் வீட்டில் வாடகைக்கு இருக்கும் வேன் ஓட்டுநரான அண்ணாமலை, சீனிவாசனிடம் பணம் அதிகமாக இருப்பதாகவும், இதனை கொள்ளையடிக்கலாம் என அவரது நண்பரான திருச்சி பெட்டவாய்தலை பகுதியைச் சேர்ந்த அவசர ஊர்தி ஓட்டுநரான மணிகண்டன், நாகராஜன், ஸ்டீபன் ஆகியோரிடம் தெரிவித்துள்ளார்.
இதற்கு வழக்கறிஞர் மனோஜ்குமார் என்பவர் திட்டம் தீட்டி கொடுத்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய மனோஜ்குமார், மணிகண்டன், அண்ணாமலை ஆகிய 3 பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
வழக்கறிஞர் மனோஜ்குமாரிடமிருந்து 53 பவுன் நகைகள், ரூ.3 லட்சத்து 3 ஆயிரம் பணத்தையும் காவல் துறையினர் மீட்டனர். கொள்ளைக்காக பயன்படுத்திய வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. இக்குற்றச் சம்பவத்தில் தொடர்புடைய, தலைமறைவாக உள்ள நாகராஜ், ஸ்டீபன் ஆகியோரை காவல் துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.