ஜெனீவா:உலகளவில் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் மருந்துகளை எதிர்க்கும் நோய் பாதிப்புகள் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 2021ஆம் ஆண்டில் உலகளவில் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 10 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இது முந்தைய ஆண்டை விட 4.5% அதிகமாகும். கரோனா பரவலுக்கு பின் காசநோய் தடுப்புகளுக்கான முன்னேற்றம் மிகப்பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டிபி அலையன்ஸ் தலைவரும் மருத்துவருமான மெல் ஸ்பிகல்மேன் கூறுகையில். “உலகம் முழுவதும் பல்வேறு நோய் தடுப்பு சிகிச்சை துறைகள் கரோனா ஊரடங்கு காரணமாக பின்னடைவை சந்தித்துள்ளன.
காசநோய் கண்டறிதல் மற்றும் அதன் சிகிச்சை முறைகள் 2019ஆம் ஆண்டுக்கு முன்பு மெல்ல மெல்ல முன்னேற்றம் கண்டுவந்தது. இந்த முன்னேற்றம் கரோனாவால் தலைகீழாக மாறிவிட்டது. கரோனா ஊரடங்கின்போது பல்வேறு நாடுகளில் மற்ற நோய்கள் பெரிதாக கண்டுகொள்ளப்படவில்லை. குறைவான சுகாதார பாதுகாப்பு கொண்ட நாடுகளில் காசநோய் நோயாளிகள் தங்களுக்கு தெரியாமலேயே மற்றவர்களுக்கு நோயை பரப்புகிறார்கள்.
சொல்லப்போனால், காசநோய் பரவல் கண்டறிதல் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டு 70 லட்சமாக இருந்தது. 2020ஆம் ஆண்டு 58 லட்மாக குறைந்துவிட்டது. இதனால் நோய் பரவாமல் இருக்கிறது என்று எடுத்துக்கொள்ள முடியாது. காசநோய் பரவல் கண்டறிதலில் மந்த நிலை ஏற்பட்டுள்ளதையே இது குறிப்பிடுகிறது. கரோனா ஊரடங்கு மற்றும் சுய தனிமைப்படுத்துதல் காசநோய் சிகிச்சைகளுக்கு பெரும் இடையூறாக இருந்திருக்கிறது.
கரோனா காலகட்டத்தில் காசநோயாளிகளில் பாதி பேர் தங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட கரோனா சிகிச்சைக்கும் மருத்துவ செலவுகளை பகிர்ந்துகொள்ள நேரிட்டுள்ளது. இதனால் போதுமான சிகிச்சைகள் கிடைத்திருந்க வாய்ப்பில்லை. இதனால் நோய் பாதிப்பு அதிகரித்து உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. காசநோய் மிகக் கொடிய தொற்று நோயாகும். இது நுரையீரலை பாதிக்கும் பாக்டீரியாவால் ஏற்படுகிறது. நோய் கிருமிகள் பெரும்பாலும் காற்றில் மூலம் பரவுகின்றன. அதாவது பாதிக்கப்பட்ட நபர் இரும்பும்போதோ அல்லது தும்மும்போதோ காசநோய் பரவுகிறது. அதோபோல ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கும் எளிதாக பரவிவிடுகிறது. உலக சுகாதார அமைப்பின் ஆய்வின்படி உலகம் முழுவதும் காசநோயால் பாதிக்கப்பட்ட 3 பேரில் ஒருவர் மட்டுமே சிகிச்சை பெறுகிறார் எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து மருத்துவர் ஹன்னா ஸ்பென்சர் கூறுகையில், காசநோய் பாதிப்புகள் மருந்துகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திகளால் கட்டுப்படுத்தக்கூடியவை. அதற்கான உடனடி நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டியது அந்ததந்த நாடுகளின் கடமை. காசநோய் பரவல் அதிகம் உள்ள நாடுகள் அதன் சிகிச்சையின் விலைகளைக் குறைக்க வேண்டும்.
குறிப்பாக கிழக்கு ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் காசநோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சையை நாடும் நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சை வழங்க வேண்டும். கடந்த பிப்ரவரியில் ரஷ்யா படையெடுப்பதற்கு முன்பே உக்ரைனில் உலகின் மிக மோசமான காசநோய் தொற்று பாதிப்பு இருந்தது. இப்போது போர் காரணமாக நோயாளிகள் சிகிச்சை பெற இயலாமை மற்றும் நோய் பரவல் அதிகரித்துள்ளது. இது ஐரோப்பா நாடுகளுக்கு மிகப்பெரும் எச்சரிக்கையாகும். போரினால் இடம்பெயர்ந்த காசநோயாளிகள் உக்ரைனில் சிகிச்சை பெற முடியும் என்றாலும், மருந்துகளின் பற்றாக்குறை மற்றும் நோயாளிகளைக் கண்காணிப்பதில் அந்த நாட்டில் சிரமம் ஏற்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:இரண்டு வைரஸ் ஒரே நேரத்தில் தாக்கினால் என்னவாகும்?