ரஷ்யா: மேற்குலகை மிரட்டிப் பார்க்கும் ரஷ்யப்படைகளையே கதிகலங்க செய்துள்ள யெவ்ஜெனி ப்ரிகோஸின் யார்? பத்து வருடம் சிறைவாசம் அனுபவித்த குற்றவாளி வாக்னர் குழுவின் தலைவரானது எப்படி? ரஷ்ய அதிபரின் மாஸ்டர் செஃப் என செல்லமாக அழைக்கப்பட்ட ப்ரிகோஸின் புடினுக்கு எதிரான கிளர்ச்சியில் இறங்க காரணம் என்ன? இப்படி பல கேள்விகளுக்கு இடையே ரஷ்யாவில் என்னதான் நடக்கிறது என்ற கேள்வியும் எழுகிறது.
ப்ரிகோசின் சோவியத் யூனியனின் இறுதி ஆண்டுகளில் 10 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்தார். சிறைவாசத்திற்கான காரணத்தை இதுவரையிலும் கூறாத பிரிகோசின், வெளியே வந்த பின்னர் ஒரு உணவகத்தை ஆரம்பிக்கிறார். அந்த உணவகம் பிரபலமாகவே ரஷ்ய அதிபர் புடினின் கவனத்தை ஈர்க்கிறது. அதனை தொடர்ந்து, பிரெஞ்சு ஜனாதிபதி ரஷ்யா வந்தபோது அதிபர் புடின் ப்ரிகோஸினின் உணவு விருந்துக்கு ஏற்பாடு செய்கிறார். இப்படி ஆரம்பித்த அவர்களின் நட்பு, நாளடைவில் வளர்ந்து ரஷ்யாவின் அரசு பள்ளிகள் மற்றும் ராணுவ உணவகங்களின் ஒப்பந்தங்களை ப்ரிகோஸின் கையகப்படுத்துகிறார்.
ஒது ஒருபக்கம் இருக்க ரஷ்யாவின் வாக்னர் குழுவின் தலைமையை ஏற்று ப்ரிகோஸின் பணியாற்ற தொடங்குகிறார். வாக்னர் குழு என்பது, ரஷ்யாவில் இயங்கிவரும் தனியார் ராணுவ ஒப்பந்த அமைப்பாகும். இது ஒருவித கூலிப்படை என்றும் கூறலாம். ஏனெனில் ரஷ்யா மட்டுமல்லாது லிபியா, மாலி, சிரியா எனப் பல பகுதிகளிலும் உள்நாட்டுப் போரில் ஒப்பந்ததாரர்களாக இந்தக் குழுவினர் இயங்குகின்றனர். உலகம் முழுவதும் இந்தக் குழு சட்டத்துக்கு அப்பாற்பட்டே செயல்படுகிறது. ரஷ்யாவிலும் தனியார் ராணுவ ஒப்பந்ததாரர்கள் சட்டபூர்வமாக தடை செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால் மறைமுகமாக அதிபர் புடினின் ஆதரவோடு, ராணுவத்தின் சம்மதத்தோடு தேவைப்படும்போது இந்தக் குழு இயக்கிக் கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது. இங்குதான் ப்ரிகோஸின் வாகனர் குழுவின் தலைவராக எப்படி ஆனார் என்பதற்கு பதில் கிடைக்கிறது. அதாவது புடினின் நம்பக தன்மைக்கு உட்பட்டவர் ப்ரிகோஸின். ராஷ்ய ராணுவத்திற்கும் வாக்னர் குழுவின் ஆதரவு அவ்வப்போது தேவைப்படும். இதனால் அதிபர் புடினின் ஆதரவோடுதான் ப்ரிகோஸின் வாகனர் குழுவில் இணைந்திருக்க முடியும் என கனிக்கப்படுகிறது.