அமெரிக்கா:அமெரிக்காவில் கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றது. அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிசும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களது பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிவடையவுள்ளது. அதன்படி, 2024ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்காக அமெரிக்காவில் உள்ள இருபெரும் கட்சிகளான குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.
இத்தேர்தலில் குடியரசுக் கட்சியை சார்பில் மீண்டும் போட்டியிட விரும்புவதாக முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதேபோல், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினரான நிக்கி ஹாலே, விவேக் ராமசாமி, ஹிர்ஷ் வர்தன் சிங் ஆகியோரும் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளனர். ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஜோ பைடன், ராபர்ட் கென்னடி உள்ளிட்டோர் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்த சூழலில் முன்னாள் அதிபர் டிரம்ப் தேர்தல் மோசடி வழக்கு, பாலியல் புகார் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார். இந்த வழக்குகள் காரணமாக, குடியரசுக் கட்சி சார்பில் டிரம்ப் ஒருவேளை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை எனில், அவருக்கு அடுத்த இடத்தில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதற்காக விவேக் ராமசாமியும் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார். சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளைக் கூறி சர்வதேச அளவில் விவாதங்களை ஏற்படுத்தி வருகிறார்.