காசா: இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையிலான போர், கடந்த அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதலில், ஏவுகணைத் தாக்குதலாக ஆரம்பித்த போர், தற்போது தரைவழி தாக்குதலில் வந்து நிற்கிறது. இதில், ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது விலைமதிப்பற்ற உயிரை இழந்துள்ளனர். மேலும், பலர் தங்களது உடமைகள், குடியிருப்பு மற்றும் உறவுகள் ஆகியவற்றை இழந்து உள்ளனர்.
இதனிடையே, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கு தங்களது ஆதரவை அளித்துள்ளன. இந்த போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும், பல பன்னாட்டு தன்னார்வல அமைப்புகளும் செய்து வருகின்றன. மேலும் அமெரிக்கா, ராணுவ உதவிகளையும் இஸ்ரேலுக்கு வழங்கி வருகிறது.
இந்த நிலையில், நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் எல்லைப் பகுதியான காசா நகரில் உள்ள அல்-அஹில் என்ற மருத்துவமனை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த தாக்குதலில், மருத்துவமனை முழுவதுமாக சேதம் அடைந்தது மட்டுமல்லாமல், 500 பேர்களின் உயிரை இழக்கச் செய்திருக்கிறது. இதனை, ஹமாஸ் ஆல் செயல்பட்டு வரும் சுகாதாரத்துறை தரப்பு உறுதி செய்து உள்ளது. மேலும், இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில்தான் இந்த மருத்துவமனை பாதிப்படைந்து உள்ளதாக ஹமாஸ் குற்றம் சாட்டி உள்ளது.