வாஷிங்டன்: ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு, தலைநகர் டெல்லியில், செப்டம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை, இந்தியா இம்முறை தலைமை ஏற்று நடத்துகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் தலைவர்கள், வந்தவண்ணம் உள்ளனர்.
ஜி20 அமைப்பின் உறுப்பு நாடுகளாக அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியக் குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்டவைகள் உள்ளன. ஜி20 அமைப்பின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டில் உச்சி மாநாடு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இம்முறை, ஜி20 உச்சி மாநாடு, தலைநகர் டெல்லியில் நடைபெறுகிறது.
ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், செப்.7ஆம் தேதி, இந்தியா புறப்பட்டார். ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு கரோனா அறிகுறிகள் தென்பட்டதை தொடர்ந்து, கடந்த 4ஆம் தேதி, அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அதிபர் ஜோ பைடனுக்கு, கடந்த 5ஆம் தேதி, கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையின் முடிவில், அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படாத நிலையில், அவர் இந்தியப் பயணம் மேற்கொண்டு உள்ளார். ஜோ பைடன், இந்தியா புறப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக, அவருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டதாக, வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.