வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் நாட்டிற்கு ஆகஸ்ட் 3ஆம் தேதி சென்றிருந்தார். இந்த பயணம் சீனாவுக்குக் கடுமையான கோபத்தை ஏற்படுத்தியது. அவரது வருகையின்போது அமெரிக்கா நெருப்போடு விளையாடுகிறது என்று சீனா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தது.
அதோடு தைவான் நாட்டின் கடற்பகுதிகளில் ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை போர் பயிற்சிகளில் ஈடுபட்டது. இதில் நூற்றுக்கணக்கான போர் விமானங்கள், நீர்மூழ்கி கப்பல்கள் பயன்படுத்தப்பட்டன. இதற்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தன. இந்த நிலையில் போர் பயிற்சிகள் மூலம் தைவான் மீது அழுத்தம் கொடுத்த சீனாவின் செயலை அமெரிக்காவால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தெரிவித்துள்ளார்.