துருக்கி:துருக்கியில் சிரியா எல்லையையொட்டிய காஜியன்டப் நகரில் கடந்த 6ஆம் தேதி அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. துருக்கியில் முதலில் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து துருக்கி, சிரியா இருநாடுகளிலும் அடுத்ததடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
இருநாடுகளிலும் 300-க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதில் மருத்துவமனைகள், குடியிருப்புகள் உள்பட ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. மக்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
இருநாடுகளிலும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. உறைய வைக்கும் பனியில், 60,000-க்கும் மேற்பட்ட பேரிடர் மீட்புப்படையினர் இடிபாடுகளை அகற்றி, அதிலிருந்து உடல்களை மீட்டு வருகின்றனர். கொத்துக் கொத்தாக உடல்கள் மீட்கப்படும் காட்சிகள் காண்போரை உறைய வைக்கின்றன. உடல்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருவதால், இந்த பேரழிவில் பலியானோர் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.