நியூயார்க்:அமெரிக்காவில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இருந்தார். கடந்த 2020ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ட்ரம்ப் தோல்வியடைந்தார், ஐனநாயக கட்சி வேட்பாளர் பைடன் வெற்றி பெற்றார். ஆனால், பைடனின் வெற்றியை ஏற்காத ட்ரம்ப், தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சி செய்ததாக புகார் எழுந்தது.
தேர்தல் முடிவுகளை மாற்றுவது தொடர்பாக தேர்தல் அதிகாரி ஒருவரிடம் ட்ரம்ப் பேசியதாகவும் ஆடியோ வெளியானது. இது தொடர்பாக ட்ரம்ப் மற்றும் அவருக்கு உதவியதாக 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு ஜார்ஜியா மாகாண நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை ட்ரம்ப் மறுத்து வருகிறார்.
இதற்கிடையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்காக ட்ரம்ப் தயாராகி வருகிறார். குடியரசுக் கட்சி சார்பில் ட்ரம்ப் போட்டியிட உள்ளார். அதிபர் தேர்தலுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், கடந்த வாரம் ட்ரம்ப் மீதான தேர்தல் மோசடி வழக்கு ஜார்ஜியா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த வழக்கில் ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டுகளை உறுதி செய்த நீதிமன்றம், வழக்கில் தொடர்புடைய ட்ரம்ப் உள்ளிட்ட 19 பேருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. அதேபோல், ஆகஸ்ட் 25ஆம் தேதிக்குள் தாமாக முன் வந்து ஆஜராகவும் நீதிமன்றம் வாய்ப்பளித்தது. இந்த வழக்கில் டிரம்ப் மீதான குற்றச்சாட்டுகள் உறுதியானால் அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 2 கோடி ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படலாம் என நீதித்துறை வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இந்த நிலையில், தேர்தல் மோசடி வழக்கில் தான் சரணடையப் போவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்ரூத் சோஷியல் (TRUTH Social) சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "உங்களால் நம்ப முடிகிறதா? - நான் கைதாவதற்காக வரும் வியாழன் அன்று ஜார்ஜியாவிலுள்ள அட்லாண்டாவிற்குப் போகிறேன். தீவிர இடதுசாரி சிந்தனையாளரான, ஃபுல்டன் கவுன்டி அட்டானி ஜெனரல் ஃபானி வில்லிஸ்-ஆல் கைது செய்யப்படுவேன். பொய் பிரச்சாரம் செய்து பணத்தை திரட்டுகிறார்கள். ஜோ பைடனின் தூண்டுதல் பேரிலேயே இவை எல்லாம் நடக்கின்றன. இவை அனைத்தும் தேர்தலைக் கருத்தில் கொண்டு நடத்தப்படுகின்றன" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு அதிபர் தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க வரலாற்றில் குற்றவியல் தண்டனையை எதிர்கொண்டுள்ள முதல் முன்னாள் அதிபர் ட்ரம்ப் என்று தெரிகிறது. ஏற்கனவே, அதிபராக இருந்தபோது அரசின் ரகசிய ஆவணங்களை சட்டவிரோதமாகப் பதுக்கி வைத்தது, நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம் கொடுத்த வழக்கு ஆகியவற்றில் ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டன.
இதையும் படிங்க: வருடாந்திர ஏவுகணை சோதனையை ஆய்வு செய்த வட கொரிய அதிபர்!