லண்டன் : இங்கிலாந்து மன்னராக மூன்றாம் சார்லஸ் முடி சூடிக் கொண்டார். அவரது மனைவி கமீலாவும் ராணியாக முடி சூட்டப்பட்டார். இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பார் மாதம் 8 ஆம் தேதி காலமானார். இதையடுத்து இங்கிலாந்தின் அடுத்த மன்னராக மூன்றாம் சார்லஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனையில் மூன்றாம் சார்லசின் முடி சூட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. ஏறத்தாழ 3 நாட்கள் லண்டன் நகரமே விழாக் கோலம் பூண்டும் இருந்தது. மன்னராக மூன்றாம் சார்லஸ் முடி சூடுவதை காண லட்சக்கணக்கான மக்கள் பல்வேறு நாடுகளில் இருந்து இங்கிலாந்தில் குவிந்தனர்.
மன்னராக மூன்றாம் சார்லஸ் முடி சூட்டும் விழா பாரம்பரியமிக்க லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. முடி சூட்டு விழாவுக்கு தங்க சாரட் வண்டியில் பக்கிங்ஹாம் அரண்மையில் இருந்து மூன்றாம் சார்லஸ், அவரது மனைவி கமீலா உள்ளிட்டோர் வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
மூன்றாம் சார்லஸ், அவரது மனைவி கமீலா மற்றும் அரச குடும்பத்தினரை காண ஆயிரக்கணக்கிலான மக்கள் தேவாலாயம் முன் திரண்டனர். மேள தாளங்கள், இசை வாத்தியங்கள் முழங்க ராஜ அணிவகுப்பு மரியாதையுடன் மன்னர் மூன்றாம் சார்லஸ், ராணி கமீலா உள்ளிட்டோர் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
முடி சூட்டு விழா நடைபெறும் வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்திற்குள் முக்கிய விஐபி.கள் 2 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். தேவாலயத்தில் பாரம்பரிய சடங்குகள் நடைபெற்றன. தொடர்ந்து இந்த விழாவில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் பைபிள் வாசித்தார். பிறகு, மன்னராகபதவியேற்பதற்கான உறுதிமொழிகளை ஏற்றுக் கொண்ட சார்லஸ், அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டார்.
தொடர்ந்து "God save King Charles" என்ற துதி பாடல் பாடப்பட்டன. இதனை தொடர்ந்து, தங்க அங்கி அணிந்து கொண்ட மூன்றாம் சார்லஸ், அரியணையில் அமர வைக்கப்பட்டார். 1661 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட மன்னருக்கான எட்வர்ட்ஸ் மணிமகுடத்தை பாதிரியர்கள் அர்ச்சிப்பு செய்தனர்.
தொடர்ந்து மூன்றாம் சார்லஸ்க்கு மணிமகுடம் அணிவிக்கப்பட்டது. இங்கிலாந்து மன்னராக மூன்றாம் சார்லஸ் முடி சூட்டப்பட்டார். தொடர்ந்து அவரிடம், செங்கோல் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே இங்கிலாந்து ராணியாக கமீலாவும் முடி சூட்டப்பட்டார். தங்க அங்கி அணிந்து அரியணையில் அமர்ந்த அவருக்கு, பாதிரியர்கள் மணி மகுடம் சூட்டி ராணியாக திருநிலைப்படுத்தினர்.
இந்த விழாவில் அரச குடும்பத்தின் அடுத்த வாரிசுகளான இளவரசர்கள் வில்லியம், ஹேரி உள்ளிட்டோர் தங்களது மனைவி குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். வெகு விமரிசையாக நடைபெற்ற இந்த விழாவில் அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், கனடா பிரதமர் ஜஸ்டின், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், அவரைத் தொடர்ந்து இங்கிலாந்தின் 8 முன்னாள் பிரதமர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
இந்திய தரப்பில் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர், மன்னார் மூன்றாம் சார்லசின் முடி சூட்டு விழாவில் கலந்து கொண்டார். முன்னதாக மன்னராக மூன்றாம் சார்லஸ் பதவியேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயம் முன் ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டனர்.
மன்னர் ஆட்சியையும், அரச குடும்பத்தையும் வெறுப்பதாக கூறி அவர்கள் தேவாலயம் முன் கோஷ்ம் எழுப்பினர். அப்படி கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இங்கிலாந்து போலீசார் கைது செய்தனர்.
இதையும் படிங்க :"தி கேரளா ஸ்டோரி" படத்திற்கு வரி விலக்கு - அறிவித்தது யார் தெரியுமா?