வாஷிங்டன்:காலையில் கண் விழிப்பதற்காக அலாரம் வைத்துவிட்டு, அலாரம் அடிக்கும்போது ஸ்னூஸ் பட்டனை (snooze button) அழுத்திவிட்டு தூங்குவது பெரும்பாலானோரின் பழக்கம். ஸ்னூஸ் பட்டனை அழுத்திய பிறகு கொஞ்ச நேரம் தூங்கும் அந்த விநாடிகள் ஒவ்வொன்றுமே சொர்க்கம் போல தோன்றும்.
இந்த ஸ்னூஸ் பட்டனைப் பயன்படுத்துவது தொடர்பாக அமெரிக்காவின் நோட்ரே டேம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்த ஆய்வறிக்கை ஸ்லீப் (SLEEP) என்ற பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 57 சதவீதம் பேர் ஸ்னூஸ் பட்டன் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக ஆய்வின் தலைமை ஆராய்ச்சியாளரான பேராசிரியர் ஸ்டீபன் மேட்டிங்லி கூறுகையில், "ஸ்னூசிங்கை செய்யக்கூடாது என மருத்துவர்கள் நீண்ட காலமாகக் கூறி வருகிறார்கள். ஆனால், ஸ்னூசிங்கை நாம் ஏன் அடிக்கடி செய்கிறோம்? என்பது தொடர்பாக ஆய்வு செய்யப்படவில்லை.
ஸ்னூசிங் பற்றி இதுவரை நமக்குத் தெரிந்த தரவுகள் எல்லாம், தூக்கம், மன அழுத்தம் தொடர்பானவைதான். அதை ஏன் பயன்படுத்தக்கூடாது? என்று கூறுவதற்கான தரவுகளை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். ஸ்னூஸ் பட்டனைப் பயன்படுத்துபவர்கள் நீண்ட காலமாகச் சோர்வாக இருக்கிறார்கள் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் தரவுகள் படி மூன்றில் ஒருவர் மட்டுமே போதுமான அளவு தூங்குகிறார்கள், அப்படியென்றால் நம்மில் பலர் சோர்வாக இருக்கிறோம் என்று அர்த்தம்.
இந்த ஆராய்ச்சிக்காக முழு நேரம் பணிபுரியும் 450 பேரைக் கண்காணித்தோம். அவர்களின் தூக்க நேரத்தையும், இதயத்துடிப்பையும் அளவிடுவதற்காக ஒரு மெஷினை அவர்களுக்கு மாட்டி விட்டோம். அதிலிருந்து தரவுகளைச் சேகரித்தோம். அதன்படி, ஆண்களை விடப் பெண்கள் 50 சதவீதம் கூடுதலாக ஸ்னூஸ் பட்டனைப் பயன்படுத்துகிறார்கள் எனத் தெரியவந்தது.
ஸ்னூஸ் பட்டனை அதிகமாகப் பயன்படுத்துபவர்கள் ஆழ்ந்த உறக்கம் இல்லாமல், இடையூறுகளுடன் உறங்கும் நிலை உள்ளதாகத் தெரியவந்துள்ளது. இவர்கள் பல ஆண்டுகளாக பணியில் இருப்பவர்கள், உயர்ந்த படிப்புகளுடன் நல்ல வேலைகளில் இருப்பவர்கள். இந்த 450 பேரில் 57 சதவீதம் பேர் ஸ்னூஸ் பட்டன் பயன்படுத்துவதை பழக்கமாக கொண்டுள்ளனர். அதேநேரம் இந்த ஆராய்ச்சி ஒரு குறிப்பிட்ட அளவு மக்களிடையே மட்டுமே நடத்தப்பட்டது. அதனால், குறைந்த வருமானம் கொண்ட மக்களிடம் இந்த பழக்கங்கள் வேறுபடலாம். அதேபோல் உலகின் ஒட்டுமொத்த மக்கள் தொகையை ஒப்பிடும்போதும் இந்த தரவுகள் மாறலாம்.