சியோல்: தென் கொரியா நாட்டில் பெய்த கனமழையால் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்து உள்ள நிலையில், இந்த இயற்கைப் பேரிடரில் சிக்கி 22 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், 14 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகளை மேற்கோள் காட்டி உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது.
இந்த ஊடகத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி, ஓசோங் நகரத்தில் வெள்ளம் சூழ்ந்த சாலையில் சிக்கி 19 வாகனங்கள் நீரில் மூழ்கி உள்ளதாகவும், அதில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதைக் கண்டறிய அதிகாரிகள் முயல்வதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
வடக்கு கியோங்சாங் மாகாணத்தில் அதிக அளவில் இறப்புகள் பதிவாகி உள்ளன. அங்கு பெரும்பாலான பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு, வீடுகள் இடிந்து விழுந்த சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்து உள்ளனர். அதைத் தொடர்ந்து தெற்கு சுங்சியோங் மாகாணத்தில் 4 இறப்புகள் பதிவாகி உள்ளதாக மத்திய பேரிடர் மற்றும் பாதுகாப்பு எதிர் நடவடிக்கை தலைமையகம் தெரிவித்துள்ளது.
தெற்கு சுங்சியோங் மாகாணத்தின் நோன்சான் பகுதியில் கடந்த ஜூலை 14ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவினால் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்து உள்ள நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதனிடையே, செஜாங் மாகாணத்தில் ஏற்பட்ட மண் சரிவில் ஒருவர் உயிரிழந்து உள்ளார். தென்கிழக்கு மாவட்டமான யோங்ஜு மற்றும் மத்திய மாகாணமான சியோங்யாங்கில் வீடுகள் இடிந்து விழுந்ததில் மூன்று பேர் உயிரிழந்து உள்ளனர்.