வர்ஷா: போலந்து நாட்டில் நிலவிய மோசமான வானிலை காரணமாக, செஸ்னா 208 ரக சிறிய விமானம், ஸ்கை டைவிங் மையத்தில் உள்ள விமான நிறுத்தும் இடத்தில் எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர் மற்றும் எட்டு பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
போலந்து நாட்டின் மத்திய பகுதியில் உள்ள சிர்சைனோ (Chrcynno) என்ற இடத்தில் ஏற்பட்ட விபத்தில் விமானத்தின் விமானி மற்றும் விமானங்கள் நிறுத்தும் இடத்தில் தஞ்சம் அடைந்து இருந்த 4 பேர் உயிரிழந்ததாக தீயணைப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் மோனிகா நோகோவ்ஸ்கா-பிரைண்டா தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க: Meteorite: மொட்டை மாடியில் காஃபி குடித்த பெண்... விடாமல் விரட்டிய விண்கல்!
காயம் அடைந்த 8 பேரில், 2 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக, போலீசார் தெரிவித்து உள்ளனர். இந்த சம்பவத்தில், ஒரு குழந்தையும் காயம் அடைந்து உள்ளதாக, அம்மாகாண ஆளுநர் சில்வெஸ்டர் டப்ரவுஸ்கி தெரிவித்து உள்ளார். தலைநகர் வர்ஷாவின் வடமேற்குப் பகுதியில் 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிர்சைனோ பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்து உள்ளது. இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள், நோவி வோர் மஜோவெய்க்கி பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.