பாரீஸ்: பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரோனின் அழைப்பின் பேரில் இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக பிரதமர் மோடி பிரான்ஸ் சென்று உள்ளார். தனது பிரான்ஸ் பயணம் மறக்க முடியாத பயணமாக அமைந்து உள்ளது என்றும், பிரான்ஸ் நாட்டின் தேசிய தின அணிவகுப்பில், இந்திய வீரர்கள் கலந்து கொண்டு பெருமை சேர்த்தது அற்புதமான நிகழ்வு என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டு உள்ளார்.
அது மட்டுமல்லாமல், “இந்த பிரான்ஸ் பயணம் மறக்க முடியாத நிகழ்வாக அமைந்து உள்ளது. தேசிய தின கொண்டாட்டத்தில், சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்ததால், இது மேலும் மதிப்பு மிக்கதாகக் கருதப்படுகிறது. இந்த அணிவகுப்பில் இந்திய அணி வீரர்களும் கலந்து கொண்டு பெருமை சேர்த்ததை பார்த்தபோது அருமையாக இருந்தது.
எல்லையற்ற அரவணைப்பு மற்றும் விருந்தோம்பல் வழங்கியமைக்கு அதிபர் இமானுவேல் மாக்ரோன் மற்றும் பிரான்ஸ் நாட்டு மக்களுக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா - பிரான்ஸ் இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவு தொடரட்டும்” என்ற வாழ்த்துகள் உடன் அணிவகுப்பு புகைப்படங்களையும் பிரதமர் மோடி ட்வீட் செய்து உள்ளார்.
முன்னதாக, நேற்று (ஜூலை 14) நடைபெற்ற பிரான்ஸ் நாட்டின் தேசிய தினக் கொண்டாட்டத்தில் அதிபர் மாக்ரோன் உடன் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்று இருந்தார். இந்த அணிவகுப்பு நிகழ்ச்சியில், இந்திய முப்படைகள் அணிவகுத்துச் சென்ற காட்சி பார்ப்பவர்களின் கண்ணை கவரும் வகையில் அமைந்து இருந்தது. இந்திய விமானப்படையின் (IAF) ரஃபேல் போர் விமானங்கள், பிரான்ஸ் நாட்டின் ஜெட் விமானங்களுடன் இணைந்து சாகச நிகழ்வுகளில் பங்கேற்றன.
தொடர்ந்து நேற்று இரவு லூவ்ரே அருங்காட்சியகத்தில் பிரதமர் மோடிக்கு அதிபர் மாக்ரோன் சிறப்பு விருந்து அளித்தார். அருங்காட்சியகத்தில் பிரதமர் மோடியை பிரான்ஸ் அதிபர் மற்றும் முதல் பெண்மணி பிரிஜிட் மேக்ரான் வரவேற்றனர் என்று மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி ட்வீட் செய்து உள்ளார்.