லண்டன்: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அரசு முறை பயணமாக பிரிட்டனுக்குச் சென்றுள்ளார். அப்போது, பிரிட்டனின் முன்னாள் பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான, டேவிட் கேமரூனுடன் (David Cameron) இரு நாடுகளுக்கு இடையேயான உறவு குறித்து சந்தித்துப் பேசினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையே உறவின் முன்னேற்றம் குறித்துப் பாராட்டினர்.
பின்னர், இந்தியா மற்றும் பிரிட்டன் இடையேயான பாதுகாப்பு தொழிற்சாலைகளை ஒருங்கிணைக்கும் தனது இலக்கை சுட்டிக்காட்டிப் பேசிய ராஜ்நாத் சிங், இரு நாடுகளுக்கு இடையேயான தொடர்பு மற்றும் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டிய திட்டங்களின் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்தி கூறினார்.
இது குறித்து, ராஜ்நாத் சிங் தனது X சமூக வலைத்தளப் பக்கத்தில், "இந்தியா-பிரிட்டன் இடையேயான ஒத்துழைப்பு குறித்து, பிரிட்டன் வெளியுறவுத்துறை செயலாளர் டேவிட் கேமரூனுடன் ஆழ்ந்து ஆலோசிக்கப்பட்டது" என பதிவிட்டிருந்தார். இவர்களின் சந்திப்பு, பிரிட்டனின் காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தில் நடைபெற்றது.
மேலும், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தனது பிரிட்டன் பயணத்தின் போது, பிரிட்டனில் வாழ் இந்தியர்களைச் சந்தித்துப் பேசினார். இந்நிகழ்ச்சியில் பிரிட்டன் வாழ் இந்தியர்கள், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என 160க்கும் மேற்பட்டவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.
இதையும் படிங்க:இந்தியாவுடனான உறவில் விரிசல்! மாலத்தீவு சுற்றுலா வருமாறு சீன மக்களை அதிபர் வலியுறுத்தலா? உண்மை என்ன?
முன்னதாக, கடந்த ஜனவரி 9ஆம் தேதி, லண்டனில் உள்ள டிரினிட்டி ஹவுஸில் (Trinity House), பிரிட்டன் பாதுகாப்புத்துறை அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸ் (Grant Shapps) உடன் சந்திப்பு மேற்கொண்டார். அப்போது, 2025ஆம் ஆண்டு கேரியர் ஸ்டிரைக் (Carrier Strike) குழு இந்திய கடற்பகுதிக்கு வருகையை முன்னிட்டு, இந்த ஆண்டு இறுதியில் அதன் லிட்டோரல் ரெஸ்பான்ஸ் குழு (Littoral Response Group) இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு அனுப்பும் திட்டம் குறித்தும், அவை இந்தியப் படைகளுடன் இணைந்து பயிற்சி பெறுவது குறித்தும் அறிவித்தார்.
இது குறித்து, ராஜ்நாத் சிங் தனது X சமூக வலைத்தளத்தில் குறிப்பிடும் போது, "பிரிட்டன்-இந்தியா இடையேயான பாதுகாப்பு குறித்து, அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர், தொழில் தலைவர்கள் மற்றும் நிர்வாகத் தலைவர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. அதில், இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு குறித்தும், இரு நாடுகளுடனான ஒரு வளமான கூட்டமைப்பின் மூலம் பெரிய காரியங்களைச் செய்திட முடியும்" எனப் பதிவிட்டிருந்தார்.
மேலும், கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அமைச்சர் பிரிட்டன் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, கடந்த 2002ஆம் ஆண்டு இந்தியாவில் பாஜக ஆட்சியின் போது, அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸின் பிரிட்டனுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார். மேலும், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பிரான்ஸ் புதிய பிரதமர் நியமனம்! திடீர் பிரதமர் மாற்றத்திற்கு என்ன காரணம்?