ஏதென்ஸ்: பிரதமர் நரேந்திர மோடி, கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் விடுத்த அழைப்பின் பேரில், இன்று (ஆகஸ்ட் 25) கிரீஸ் நாட்டிற்குச் சென்றுள்ளார். முன்னதாக, அவர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வந்த 15வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். இந்த மநாட்டில் பல உலகத் தலைவர்கள் உடன் இந்தியாவின் உறவினை வலுப்படுத்தும் விதமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருந்தார்.
இந்த நிலையில்தான், தென் ஆப்பிரிக்காவில் இருந்து கிரீஸ் தலைநகருக்கு வந்து உள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டு உள்ள ‘X' வலைதளப் பதிவில், “ஏதென்ஸில் தரையிறங்கி விட்டேன். இந்தியா - கிரீஸ் நட்பினை ஆழப்படுத்தும் நோக்கில் இந்த கிரீஸ் பயணம் மிகவும் பயன் உள்ளதாக அமையும் என எதிர்பார்க்கிறேன். நான் கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன். அதேநேரம், அங்கு இருக்கும் இந்திய மக்கள் மத்தியிலும் உரை நிகழ்த்த இருக்கிறேன்” என பதிவிட்டு உள்ளார்.
மேலும், கிரீஸ் அதிபர் கடெரினா சகெல்லரோபோவுலூ உடன் சந்திப்பை நிகழ்த்தவும் பிரதமர் எதிர்பார்க்கிறார். மேலும், இது குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி வெளியிட்டு உள்ள ‘X' வலைதளப் பதிவில், “பிரதமர் மோடி, தனது முதல் கிரீஸ் பயணத்தின்போது வரலாற்று சிறப்புமிக்க ஏதென்ஸில் காலடி எடுத்து வைத்து உள்ளார். அப்போது அவரை நிதியமைச்சர் ஜார்ஜ் கரபெட்ரிட்ஸ் விமான நிலையத்தில் வைத்து பிரதமரை உற்சாகமாக வரவேற்றார்” என குறிப்பிட்டு உள்ளார்.