ஜப்பான்: இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா என நான்கு இந்தோ - பசிபிக் நாடுகள் உள்ளடங்கிய குவாட் அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நாளை (மே 24) நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று (மே 23) காலை டோக்கியோ சென்றடைந்தார்.
டோக்கியோ விமான நிலையத்தில் அவரை ஜப்பான் தலைவர்கள் வரவேற்றனர். பிரதமர் தங்கயிருந்த நட்சத்திர விடுதி முன்பு குவிந்த புலம்பெயர் இந்தியர்கள் உள்பட பலரும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து, பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில்,"டோக்கியோவில் தரையிறங்கிவிட்டேன். குவாட் உச்சிமாநாடு, குவாட் தலைவர்கள், ஜப்பானிய தொழிலதிபர்கள், புலம்பெயர் இந்தியர்கள் ஆகியோர் உடனான சந்திப்பு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறேன்" என ஆங்கிலம் மற்றும் ஜப்பானிய மொழிகளில் பதிவிட்டுள்ளார்.
இந்த பயணத்தில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் கிஷிதா, ஆஸ்திரேலியாவின் பிரதமராக புதிதாக பதவியேற்றுள்ள அந்தோணி அல்பானீஸ் ஆகியோரை தனித்தனியே சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை மேற்கொள்ள உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளில், இது பிரதமர் மோடியின் 5ஆவது ஜப்பான் பயணம்.
ரஷ்யா - உக்ரைன் போர் நடைபெற்று கொண்டிருக்கும் நேரத்தில், இந்தோ - பசிபிக் நாடுகளின் குவாட் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. மேலும், இந்த மாநாட்டில் இந்தோ - பசிபிக் பகுதிகளின் வளர்ச்சி குறித்தும், நடப்பு உலக அரசியல் சார்ந்தும் பேச்சுவார்த்தை மேற்கொள்ள உள்ளனர். இந்திய - ஜப்பான் நாடுகளின் நல்லுறவுக்கு பாலமாக விளங்கும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர் இந்தியர்களை பிரதமர் மோடி சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆஸ்திரேலியா பிரதமர் தேர்தல்: 17 இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் போட்டி!