காசா (பாலஸ்தீனம்): கடந்த அக்டோபர் 7ஆம் தேதி துவங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரின் பலி எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியதாக, பாலஸ்தீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அரசு ஊடகத்தின் இயக்குநர் இஸ்மாயில்-அல்-தவப்தா (Ismail al-Thawabta), சீன செய்தி நிறுவனமான சின்ஹுவாவிற்கு (Xinhua) பேட்டி அளித்துள்ளார்.
அதில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 5 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட குழந்தைகளும், 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட பெண்களும் பலியாகி உள்ளதாகவும், சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் மீட்கப்படாதவர்களின் எண்ணிக்கை, 4 ஆயிரம் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 6 ஆயிரத்தை தாண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த அக்டோபர் 7ஆம் தேதி, ஹமாஸ் ஆயுதப் படையினர் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தி, 200 நபர்களை பிணைக் கைதிகளாக கைது செய்தனர். ஹமாஸ் படையினரின் தாக்குதலின் போது ஆயிரத்து 200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அரசு தரப்பில் கூறப்பட்டது.
அதற்கு பதில் தாக்குதலாக இஸ்ரேல் ராணுவம், காசா பகுதியில் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், முகாம்கள், மசூதிகள், தேவாலயங்கள் எனப் பல இடங்களில் நடத்திய தொடர் தாக்குதல்களில், 49 ஊடக நிபுணர்கள் உட்பட, ஏராளமான மக்கள் மரணமடைந்துள்ளனர். இதனைக் கண்டித்து உலகின் பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இஸ்ரேலிய ராணுவம் (IDF) தரை வழியாக வடக்கு காசா பகுதிகளுக்குள் நுழைந்து சோதனை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில், ஹமாஸ் அமைப்பின் அதிகாரிகளான ரிமால், ஷேக் எஜலின் ஆகியவர்களின் வீடுகளில் மேற்கொண்ட சோதனையில் பல ஆயுதங்களை கைப்பற்றியுள்ளனர்.
அதன் பின்னர் அவர்களின் வீடுகளில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேற்கொண்ட சோதனையில், 35 சுரங்கங்களை கண்டுபிடித்துள்ளதாகவும் இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், ஹமாஸ் படையினரின் முகாம்களில் மேற்கொண்ட சோதனையில், 7 ஏவுகணைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய ராணுவத்தினர் அல்-ஷிஃபா (Al-Shifa) மருத்துவமனையில் மேற்கொண்ட சோதனையில் போது, சிகிச்சை பெற்று வந்த குழந்தைகள் உட்பட நோயாளிகள் பலர் வெளியேற்றப்பட்டனர். அதில் எட்டு குழந்தைகள் பரிதாபமாக பலியாகினர். மேலும் வெளியேற முடியாத நிலையில் இருக்கும் தீவிர சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் சிலர் மட்டும் மருத்துவமனையிலேயே இருந்தனர்.
இந்நிலையில், அல்-ஷிஃபா மருத்துவமனையில் மேற்கொண்ட சோதனையில், ஹமாஸ் அமைப்பினரின் சுரங்கம் இருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் அறிவித்திருந்தது. அத்தகவலுக்கு மறுப்பு தெரிவித்த காஸாவின் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இயக்குநர் மௌனிர் எல்-போர்ஷ் (Mounir-el-Boursh), "அது முற்றிலும் பொய்யான தகவல்" எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க:இஸ்ரேலுக்கு எதிரான ஐ.நா. தீர்மானம்.. இந்தியா ஆதரவு - திரிணாமுல் காங்கிரஸ் வரவேற்பு!