மாஸ்கோ:உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை ஓராண்டை நிறைவு செய்தது. உருக்குலைந்த உக்ரைன் நகரங்களில் தொடர்ந்து மரண ஓலம் கேட்டுக் கொண்டு இருக்கின்றன. போரால் சொந்த ஊரை விட்டு அகதிகளாக அண்டை நாடுகளில் குடியெயர்ந்த மக்கள் மீண்டும் சொந்த நாட்டிற்கு திரும்பும் நாளை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
சோவியத் யூனியன் பிளவு பட்டது முதல் தனி நாடாக உருவான உக்ரைனை, மீண்டும் தன்னுடன் இணைத்துக் கொள்ள ரஷ்யா திட்டமிட்டது. அதேநேரம் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளில் தன்னை இணைத்துக் கொள்ள உக்ரைன் முயற்சித்து வந்தது. நேட்டோ படையில் உக்ரைன் இணைவது பிராந்திய ரீதியிலான பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என ரஷ்யா கருதியது.
இதையடுத்து கடந்த அண்டு பிப்ரவரி 24ஆம் தேதி உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை ரஷ்யா மேற்கொண்டது. தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் ரஷ்யாவின் தாக்குதலில் உருக்குலைந்தன. ஐரோப்பியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் ரஷ்யாவுக்கு தக்க பதிலடியை உக்ரைன் வழங்கி வருகிறது.
ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் இதுவரை 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டதாகவும், 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டதாகவும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் ஆய்வறிக்கை கூறுகின்றன. அதேநேரம் ஐநா அறிக்கையை விட பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என மற்ற தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
போர் நிறுத்தம் குறித்து பல்வேறு நாடுகள் ரஷ்யாவுடன் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தம் செய்து இரு தரப்பு பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும் ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்தன.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தனக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை வீட்டோ அதிகாரம் மூலம் ரஷ்யா ரத்து செய்தது. தொடர்ந்து உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் வகையில் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் ரஷ்யாவில் உள்ள தங்களது நிறுவனங்களை மூடி நாட்டை விட்டு வெளியேறின.