ஜெர்மனி: ஹம்பர்க் நகரில் உள்ள தேவாலயத்தில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஜெர்மனியின் இரண்டாவது பெரிய நகரமான ஹம்பர்க் ஜனநெருக்கடியுடனும், எப்போதும் பரபரப்புடனும் காணப்படும் முக்கிய நகரமாகும்.
இந்நிலையில், நேற்று (மார்ச்.09) இரவில் ஹம்பர்க் நகரில் உள்ள தேவாலயத்தில் பயங்ரக வெடி சத்தம் கேட்டதாகக் கூறப்படுகிறது. வெடிச் சத்தத்தை தொடர்ந்து தேவாலயத்திலிருந்து மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடத் தொடங்கி உள்ளனர். தேவாலயத்திலிருந்து பொது மக்கள் பதறியடித்து ஓடி வருவதை கண்ட மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்து உள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில், தேவாலயத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியது தெரிய வந்தது. மேலும் போலீசாரின் விசாரணையில் தேவாலயத்திற்குள் நுழைந்த மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
7 பேரின் சடலம் கைப்பற்றப்பட்ட நிலையில், தொடர் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் தேவாலயத்தில் தாக்குதல் நடத்திக் கொண்டு இருந்தவரை சுட்டுக் கொன்றதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு காவல் துறையினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.