அபுஜா: நைஜீரியா நாட்டின் வடமேற்குப் பகுதியில் உள்ள கடுனா மாவட்டத்தின் ஜரியா பகுதியில் உள்ள ஜரியா சென்ட்ரல் மசூதியில், நேற்று (ஆகஸ்ட் 11) வெள்ளிக்கிழமை பிரார்த்தனை நடைபெற்றது. இந்த பிரார்த்தனையில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மசூதியின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. பின்னர் இது குறித்த தகவல் அறிந்த மீட்புப் படையினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
கட்டட இடிபாடுகளில் பலர் சிக்கி உள்ளதாக அஞ்சப்படும் நிலையில், இந்த சம்பத்தில் 7 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
மீட்புப் பணிகளில் அவசரகால பேரிடர் மேலாண்மை அமைப்பினர் ஈடுபட்டு உள்ளனர். அதன் உயர் அதிகாரி கூறியதாவது, “இந்த மசூதி 1830ஆம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்டு உள்ளது. மிகவும் பாரம்பரியமான மசூதி என்பதால், இங்கு நடைபெறும் வெள்ளிக்கிழமை பிரார்த்தனை மிகவும் பிரபலமானது ஆகும்.
வாரந்தோறும் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வர். அந்த நிலையில், நேற்று பிரார்த்தனை நடைபெற்றுக் கொண்டு இருக்கும்போது, மசூதியின் மேற்கூரை எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. தகவல் அறிந்ததும் உடனடியாக துரிதமாக செயல்பட்டு, கட்டட இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்கத் துவங்கினோம். இந்த இடிபாடுகளில் இருந்து 7 பேர் சடலமாக மீட்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன.