ஹைதராபாத்: பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் தனது தோழியுடன் வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து காஃபி குடித்துக்கொண்டிருந்துள்ளார். அப்போது மிகுந்த சத்தத்துடன் மேலே இருந்து ஏதோ ஒன்று தன் மீது விழுந்ததாகவும், இதனால் தனது முதுகெலும்பில் பாதிப்பு ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.
இது குறித்து அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதில், பெண் ஒருவர் அவரது வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து தனது தோழியுடன் காஃபி குடித்ததாகவும், அப்போது பூம் என்ற சத்தத்தோடு ஏதோ ஒரு மர்மப் பொருள் அவர் மீது விழுந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, அந்தப் பெண் தன் மீது விழுந்த அந்தப் பொருள் என்ன? எனத் தெரியாமல் குழம்பியுள்ளார். சிமென்ட் ஓடுபோல் தோன்றியதால் தனது வீட்டின் அருகே உள்ள கட்டுமானத் தொழில் செய்யும் நபரை வரவழைத்த அந்தப் பெண் அவரிடம் தன் மீது விழுந்த பொருளை காட்டி விசாரித்துள்ளார்.
அதைப் பார்த்த அந்த நபர் இது சிமென்ட் ஓடு போன்றோ அல்லது கல் போன்றோ இல்லை எனக் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, ஆய்வாளரான தியரி ரெப்மேன் என்பரிடம் அந்த பொருளை ஆய்வு செய்யக்கோரியுள்ளார், அந்த பெண். இவர் ஒரு புவியியலாளர் என்பதால் அந்தப் பொருள் புவியில் இருக்கும் பாறைகளுக்கு அப்பாற்பட்டு இருப்பதாகவும், இது ஒரு விண் கல்லாக இருக்கலாம் எனவும் கூறியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தியரி ரெப்மேன் அந்த பெண்ணின் மீது விழந்த அந்த பாறை போன்ற பொருளில் இரும்பு மற்றும் சிலிக்கான் கலவை அதிகம் இருப்பதாகவும், 100 கிராம் எடை உள்ளதாகவும்; இதனால் அது ஒரு விண் கல்லாக இருக்க வாய்ப்பு இருக்கிறது எனவும் கூறியுள்ளார்.