லண்டன்: பிரிட்டனை தலைமையகமாகக் கொண்ட சர்வதேச செய்தி நிறுவனமான 'பிபிசி டூ', "India: The Modi Question" என்ற புதிய தொடரை தொடங்கியுள்ளது. இந்திய பிரதமர் மோடிக்கும், இந்தியாவில் உள்ள இஸ்லாமிய சமூகத்திற்கும் இடையிலான பிரச்சினை, 2002 குஜராத் கலவரத்தில் மோடியின் பங்கு, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து, குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்டவை குறித்து இந்த தொடர் ஆராய்கிறது.
இந்த தொடரின் முதல் எபிசோட் கடந்த 17ஆம் தேதி வெளியானது. இந்த நிலையில், பிபிசியின் இந்த புதிய தொடர் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் வகையில் இருப்பதாக, பிரிட்டன் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் ராமி ரேஞ்சர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராமி ரேஞ்சர், பிபிசியின் இந்த தொடர் ஒருதலைப் பட்சமாக இருப்பதாகவும், இது லட்சக்கணக்கான இந்தியர்களின் மனதை புண்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.