பிரிட்டிஷ் ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவு உலகெங்கும் உள்ள அனைவரின் அனுதாபங்களையும், இரங்கல்களையும் பெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது 'ஆபரேஷன் லண்டன் பிரிட்ஜ்' எனும் சொல் ஆங்காங்கே பேசப்பட்டு வருகிறது. இந்த வார்த்தையைக் கேட்டதும் யாரும் இதை ஏதோ ஒரு ராணுவத்திட்டமென்று எண்ணிவிட வேண்டாம்.
இது மறைந்த பிரிட்டிஷ் ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு குறித்த ரகசிய சொல், அதாவது ‘கோட்’ வார்த்தை. அதுவென்ன இறுதிச்சடங்கிற்கு ’கோட்’ வார்த்தைகளெல்லாம் எனக் கேட்கலாம். ஆம். மறைந்த ராணி எலிசபெத்திற்கு மட்டுமல்ல; பிரிட்டிஷ் ராஜகுடும்பத்தில் மறைந்த அனைவரின் இறுதிச்சடங்குகளுக்கும் கோட் வார்த்தைகள் இருந்தன.
ராணி எலிசபெத், தனது அரியணையில் 70 ஆண்டுகள் காலம் இருந்தவர். அவருக்கு குதிரை சவாரி செய்யும் பழக்கம் உண்டென்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதை அவர் சிறு வயதிலிருந்தே விரும்பியிருந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நாடே கரோனா கட்டுப்பாட்டு ஊரடங்கில் தத்தளித்தபோதுகூட, அவர் தனது பொழுதுப்போக்கிற்காக குதிரை சவாரி செய்தார்.
அவ்வளவு பெரிதாக உடற்பயிற்சிகளில் ராணி எலிசபெத்திற்கு ஆர்வம் இல்லாதிருப்பினும் தனது செல்லப்பிராணியுடன் தினமும் நடப்பதை விரும்பியிருந்தார். தினமும் நான்கு முறை ஜின் அருந்துவது, மான் மற்றும் மாட்டுக்கறிகளை விரும்பி உண்ணுவதென ஏராளமான தனக்கெனத் தனி பழக்கங்களை ராணி எலிசபெத் கடைபிடித்து வந்தார்.