காசா: நான்கு நாள் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் இரண்டாவது கட்டமாக, 13 இஸ்ரேலியர்கள் மற்றும் தாய்லாந்தை சேர்ந்த 4 பேரை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர். இதற்கு பதிலாக 39 பாலஸ்தீனியர்களை சிறையில் இருந்து விடுவித்தது இஸ்ரேல்.
இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கியது. இதில் ஹமாசின் காசா பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர தாக்குதலை நடத்தியது. இதில் பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் ஹமாஸ் அமைப்பினர் பிடித்து சென்ற பணயக் கைதிகளை விடுவிக்க நான்கு நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது.
அதுபோல இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனியர்களை விடுவிப்பதாகவும் முடிவு செய்யப்பட்டது. இந்த சூழலில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் போர் நிறுத்தம் தொடங்கியது. முதல் கட்டமாக 13 இஸ்ரேலியர்கள், 11 வெளிநாட்டவர்கள் உள்பட 24 பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தது.
இதையடுத்து இரண்டாவது கட்டமாக பணயக் கைதிகளை விடுவிப்பதில் ஹமாஸ் அமைப்பு தாமதம் கட்டுவதாக இஸ்ரேல் கூறிய நிலையில், ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறி உள்ளதாக ஹமாஸ் குற்றம் சாட்டியது. இதனால் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.
இதையும் படிங்க: இஸ்ரேல்-ஹமாஸ் போர்: காசாவில் பலி எண்ணிக்கை 13,000 ஆக உயர்வு..!
இந்நிலையில், இரண்டாவது கட்டமாக 13 இஸ்ரேலியர்களையும், தாய்லாந்தை சேர்ந்த 4 பேரையும் ஹமாஸ் விடுவித்தது. அவர்கள் பரிசோதனைக்காக மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் அவர்களது குடும்பத்தினருடன் மீண்டும் இணைக்கப்படுவர் என கூறப்பட்டது. இதற்கு ஈடாக 39 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்தது. இதில் 33 சிறுவர்கள் மற்றும் 6 பெண்கள் அடங்குவர்.
விடுவிக்கப்பட்டவர்களுள் நூர்ஹான் அவாத் எனும் பெண் 2016 ஆம் ஆண்டு 17 வயதாக இருந்தபோது இஸ்ரேல் வீரரை கத்தரிக்கோலால் தாக்கிய குற்றத்திற்காக பதிமூன்று ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர். அவருக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. அதுபோல விடுதலை செய்யப்பட்ட பாலஸ்தீனிய பெண் ஷுரூக் துவியத் ஜெருசலேமில் உள்ள தனது வீட்டிற்கு வந்தடைந்தார்.
அங்கு அவரை குடும்ப உறுப்பினர்கள் கட்டிப்பிடித்து முத்தமிட்டு வரவேற்றனர். இதனை தொடர்ந்து மேலும் கைதிகளின் வருகைக்காக நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் மேற்குக்கரை நகரமான பெய்டுனியாவில் காத்திருந்தனர். சனிக்கிழமையன்று ஹமாஸால் விடுவிக்கப்பட்ட இஸ்ரேலிய பணயக் கைதிகளில் ஏழு குழந்தைகள் மற்றும் ஆறு பெண்கள் உள்ளடங்குவதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் அறிவித்துள்ளது.
விடுவிக்கப்பட்ட பணயக் கைதிகளில் பெரும்பாலானவர்கள், அக்டோபர் 7ஆம் தேதி எல்லை தாண்டிய தாக்குதலின் போது, ஹமாஸ் போராளிகளால் அழிக்கப்பட்ட சமூகமான கிப்புட்ஸ் பீரியைச் சேர்ந்தவர்கள் என்று கிப்புட்ஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 4 நாட்களுக்கு போர் நிறுத்தம்; இஸ்ரேல் ஒப்புதல் - 50 இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிக்கிறது ஹமாஸ்!