வாஜிராபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் வாஜிராபாத்தில் நடந்துள்ளது. இம்ரான் கான் தனது கட்சியின் மூத்த நிர்வாகிகள் உடன் லாகூரில் உள்ள லிபர்ட்டி சவுக்கிலிருந்து இஸ்லாமாபாத் வரை மிக்பெரும் பேரணியை தொடங்கினர்.
இந்த பேரணி வாஜிராபாத்தில் நடந்துகொண்டிருந்தபோது, இம்ரான் கான் நின்றுகொண்டிருந்த கார் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் இம்ரான் கான் உள்பட 5 பேருக்கு குண்டடிபட்டது. அதைத்தொடர்ந்து 5 பேரும் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வாஜிராபாத்தில் பதற்றம் நிலவிவருகிறது. பாகிஸ்தானில் பொருளாதார சீர்கேடு, பணவீக்கம், விலை வாசி உயர்வு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் காரணமாக அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் பதவி விலக வேண்டும் என்று நாடு முழுவதும் போராட்டங்களும், எதிர்ப்புகளும் கிளம்பின. இதனிடையே இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மார்ச் 28ஆம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தன.