சான் பிரான்சிஸ்கோ(அமெரிக்கா):கடந்த சில நாட்களுக்கு முன்பு, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் யுனிஃபைட் ஸ்கூல் டிஸ்ட்ரிக்ட் (LAUSD) என்ற பெரிய பள்ளி நிறுவனத்தின் மீது ரான்சம்வேர் தாக்குதல் நடத்தப்பட்டது.
ரஷ்ய மொழி பேசும் வைஸ் சொசைட்டி என்ற ஹேக்கர்கள் அமைப்பு இந்த தாக்குதல் நடத்தியதாகத் தெரிகிறது. இவர்கள் பள்ளியின் கணினிகளில் இருந்து ஏராளமான தரவுகளை திருடியதாகவும், அவற்றை வெளிவிடக்கூடாது என்றால், அக்டோபர் 4ஆம் தேதிக்குள் குறிப்பிட்ட தொகையை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
பள்ளி நிர்வாகம் அந்த தொகையைத் தராததால், ஹேக்கர்கள் திருடிய 500ஜிபி தரவுகள் வைஸ் சொசைட்டியின் டார்க் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக டெக் கிரஞ்ச் என்ற செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. பாஸ்போர்ட் விவரங்கள், சமூகப் பாதுகாப்பு எண்கள், வரிப் படிவங்கள், சட்ட ஆவணங்கள், நிதி அறிக்கைகள் உள்ளிட்ட ஏராளமான தரவுகள் வெளியிடப்பட்டதாகத் தெரிகிறது.
மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைகள், மாணவர்களின் உளவியல் மதிப்பீடுகள் உள்ளிட்ட ரகசியத் தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. வைஸ் சொசைட்டி என்ற ஹேக்கர்கள் அமைப்பு, அமெரிக்காவில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களை குறிவைத்து சைபர் தாக்குதல்களை நடத்தி வருகின்றது.
இதையும் படிங்க: சிஎன்என் ஊடகம் தனக்கு எதிராக வெறுப்பு பிரசாரம் செய்கிறது - கடுப்பில் வழக்குத்தொடர்ந்த டிரம்ப்!