இஸ்லாமிய மதத்தை பின்பற்றும் நாடுகளில் ஈரான் முதன்மையானது. இங்குள்ள 9 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் மற்றும் பெண்கள் முழு உடலையும் மறைக்கும் வண்ணமாக ஹிஜாப் அணிய வேண்டும் என்ற சட்டம் உள்ளது. மேலும் இவ்வாறு முறையாக அணியாதவர்களை கண்காணிக்க ‘காஷ்ட்-இ-எர்சாத்’ (Gasht-e Ershad) என்ற அறநெறி காவல்துறை தனியாக நியமிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 22 வயதான மஹ்ஸா அமினி (Mahsa Amini) என்ற பெண், ஈரான் தலைநகரான தெஹ்ரான் சென்றபோது முறையாக ஹிஜாப் அணியவில்லை எனக்கூறி, அவரை அறநெறி காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு கோமா நிலையில் அமினி இருந்தார். தொடர்ந்து சிகிச்சை பலனின்றி அமினி உயிரிழந்தார்.
இச்சம்பவம் ஈரான் நாட்டில் உள்ள பெண்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இச்சட்டம் நடைமுறைக்கு வந்தது முதலே, இஸ்லாமிய பெண்கள் மற்றும் சில சமூக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இதனிடையே அமினியின் உயிரிழப்பு அரங்கேற, தெஹ்ரான் உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களில் பெண்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.