இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ளார். இஸ்லாமாபாத் நீதிமன்றத்தின் வாசலில் வைத்து பாகிஸ்தான் துணை ராணுவத்தின் ரேஞ்சர்ஸ் படையினர் அதிரடியாக கைது செய்தனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த இம்ரான்கான் திடீர் அரசியல் பிரவேசம் எடுத்தார். கடந்த 1996ஆம் ஆண்டு தெஹ்ரிக் இ இன்சாப் (Tehreek-e-Insaf ) என்ற கட்சியைத் தொடங்கிய இம்ரான்கான் கடந்த 2018ஆம் ஆண்டு பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வென்று பிரதமரானார்.
பாகிஸ்தானில் நிலவும் ஸ்திரத்தன்மையற்ற அரசியல் சூழல் காரணமாக இம்ரான் கான் பிரதமர் பதவியை இழந்தார். நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமான இம்ரான் கான் அரசு பதவி விலகக்கோரி நாடாளுமன்றத்தில் தீர்மானங்களும் கொண்டுவரப்பட்டன. கடந்த 2022ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் சிக்கிய இம்ரான் பிரதமர் பதவியை பறிகொடுத்தார்.
இந்நிலையில் புதிதாக பதவியேற்ற ஷெபாஸ் ஷெரிப் தலைமையிலான அரசை, இம்ரான் கான் தொடர்ந்து விமர்சித்து வந்தார். ஆட்சியில் பல்வேறு ஊழல்கள் நடைபெறுவதாக இம்ரான் கான் அடிக்கடி அரசுக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டு வந்தார். இதன் காரணமாகவே, அவர் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
இம்ரான் கானை கைது செய்ய நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால், நீதிமன்ற விசாரணைகளுக்கு இம்ரான் கான் ஆஜராகாமல் இருந்தார். இதனால், அவருக்கு எதிராக நீதிமன்றங்கள் பிடிவாரண்டுகளைப் பிறப்பித்தன. ஒருகட்டத்தில் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.