வாஷிங்டன்(அமெரிக்கா):அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் புளோரிடாவில் உள்ள தனது வீட்டில் எஃப்.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தெரிவித்துள்ளார். இது குறித்து ட்ரம்ப் கூறுகையில், "புளோரிடாவின் பாம் பீச்சில் உள்ள எனது அழகான வீடு, மார்-ஏ-லாகோ, தற்போது எஃப்.பி.ஐ அதிகாரிகளின் குழுவால் சோதனையிடப்பட்டு, ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது" என்று கூறினார். நேற்று(ஆகஸ்ட் 8) திடீரென எந்த வித முன்னறிவிப்புமின்றி சோதனை நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இருப்பினும், டிரம்பின் வீட்டில் நடந்த சோதனை குறித்து எப்.பி.ஐ மற்றும் அமெரிக்க நீதித்துறை இது வரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. இந்த சோதனைக்கு அமெரிக்க நீதிபதியின் அங்கீகாரம் அவசியம்.
இதுபோல் முன்னறிவிப்பின்றி முன்னாள் அதிபர் அலுவலகத்தை சோதனையிடுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வாட்டர்கேட் ஊழலில் குற்றம்சாட்டப்பட்டு அதிபர் மாளிகையை விட்டு வெளியேறிய ரிச்சர்ட் நிக்சன் வீட்டிலும் எஃப்.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இது குறித்து அமெரிக்க சட்ட வல்லுநர்கள் கூறுகையில், இந்த சோதனை இரண்டு முக்கிய காரணங்களுக்காக ஒரு நீதிபதியால் அனுமதிக்கப்பட்டிருக்கலாம். ஒரு கூட்டாட்சியில் நடந்த குற்றம் குறித்து விசாரிக்கப்படுவதற்காக இந்த சோதனை நடத்தப்பட்டிருக்கலாம். அந்த குற்றம் தொடர்பான ஆதாரங்கள் நடத்தப்பட்ட சோதனையில் சிக்கியிருக்க கூடும் என கூறுகின்றனர்.
மேலும் ட்ரம்ப் தனது அதிபர் பதவிக் காலத்தில் அவரது அதிகாரபூர்வ பதிவுகளை தவறாகக் கையாண்டது தொடர்பாக இந்த ரெய்டு நடந்திருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அரசின் அதிகாரப்பூர்வ ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த 15 பெட்டிகளை ட்ரம்ப் எடுத்துச் சென்றுள்ளார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் அந்த ஆவணங்களை அழிப்பதற்கும் முயற்சி செய்துள்ளார் என சந்தேகிக்கப்படுகிறது.
2020 ஜனாதிபதித் தேர்தலின் முடிவை மாற்றுவதற்காக டிரம்ப் முயற்சி செய்ததாக குறித்த தகவல்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அமெரிக்க தலைநகரில் ஜனவரி 6 ஆம் தேதி நடைபெற்ற கலவரங்கள் பற்றிய விசாரணை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இஸ்ரேல் - பாலஸ்தீன விவகாரம்: 12 மணிநேரத்திற்கும் மேலாக தொடரும் ராக்கெட் தாக்குதல்!