மணிலா:துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த வாரம் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41,000-ஐ கடந்துள்ளது. ஏராளமான வீடுகள் மற்றும் கட்டடங்கள் இடிந்து விழுந்த நிலையில், மீட்புப் பணிகள் இன்னும் நடந்து வருகின்றன. இதனால் ஏற்பட்ட அதிர்ச்சி மறைவதற்குள் நியூசிலாந்தின் வெலிங்டன் அருகே நேற்று முன்தினம் (பிப்.15) நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், பிலிப்பைன்ஸில் நேற்று நள்ளிரவு (பிப்.15) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மஸ்பேட் மாகாணத்தின் கடற்கரை நகரமான பதுவான் நகரில் இருந்து 11 கி.மீ தூரத்தில், 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நள்ளிரவில் வீடுகள் குலுங்கியதால், மக்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர். ஒருசில வீடுகள் இடிந்து விழுந்த நிலையில், பல்வேறு கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.