அங்காரா:தெற்கு துருக்கியில் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7.7ஆக பதிவாகியது. பின்னர் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் அண்டை நாடுகளான லெபானன் மற்றும் சிரியாவிலும் உணரப்பட்டது.
இதனை துருக்கியின் அதானா, அதியமான், தியார்பகிர், காஜியான்தெப், ஹாடய், கிலிஸ், மலாத்யா, ஒஸ்மானியா மற்றும் சன்லியுர்ஃபா உள்ளிட்ட 10 மாகாணங்களில் உள்ள 13 மில்லியன் மக்கள் உணர்ந்தனர். இதனால் நகரின் பல்வேறு இடங்களில் கட்டடங்கள் இடிந்து பெரும் விபத்துக்குள்ளானது.
இதனையடுத்து மீட்புப்படையினர் விரைந்து மீட்புப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். துருக்கியின் இந்த மீளாத் துயரில் 75 நாடுகள் மற்றும் 16 சர்வதேச நிறுவனங்கள் பங்கெடுத்துள்ளன. அதிலும், இந்தியா உள்பட 56 நாடுகளைச் சேர்ந்த 6,479 மீட்புப்படை வீரர்கள் துருக்கியின் 10 மாகாணங்களில் தொடர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேநேரம் பேரிடர் ஏற்பட்ட அடுத்த 24 மணி நேரத்திற்குள் 19 நாடுகளைச் சேர்ந்த மீட்புப்படையினர் துருக்கியில் முகாமிட்டதாக துருக்கியின் வெளியுறவுத்துறை அமைச்சர் மெவ்லூட் கவுசோக்லு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இதுவரை துருக்கி மற்றும் சிரியாவில் 20 ஆயிரத்து 783 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 75 ஆயிரத்து 592 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டதாகவும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் துருக்கியில் மட்டும் 17,406 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 70 ஆயிரத்து 347 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அதேபோல் சிரியாவில் 3 ஆயிரத்து 377 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 5 ஆயிரத்து 245 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இதனிடையே துருக்கி அதிபர் தாயீப் எர்டோகன், துருக்கியின் தெற்கு மாகாணங்களுக்கு 3 மாத காலம் அவசர நிலையை பிரகடனப்படுத்தி உள்ளார்.
இதற்கு முன் கடந்த 1999ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தை காட்டிலும் தற்போதைய நில நடுக்கத்தில் மக்கள் இறப்பு அதிகரித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 தவணையாக இந்திய விமானப் படை விமானம் துருக்கி மட்டும் சிரியாவுக்கு நிவாரண பொருட்களை கொண்டு சென்று உள்ளது. பேரிடர் மீட்பு படையினர் மற்றும் மருத்துவ குழுவினர் அயராது தொடர் மனிதாபிமான சேவையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:துருக்கி, சிரியாவில் 15,000-ஐ கடந்த உயிர் பலி - மீட்பு பணிகள் தீவிரம்!