பெய்ஜிங் (சீனா): டெல்லியில் அடுத்த வாரம் நடைபெற உள்ள G20 உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்க மாட்டார் அவருக்கு பதிலாக சீனப் பிரதிநிதிகள் குழுவை சீன பிரதமர் லீ கியாங் வழிநடத்துவார் என்று சீனாவின் வெளியுறவு துறை அமைச்சகம் இன்று (செப்.4) தெரிவித்துள்ளது.
சீன வெளியுறவு துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியக் குடியரசு சார்பான கொடுக்கப்பட்டுள்ள அழைப்பிதழ் அடிப்படையில் செப்டம்பர் 9 மற்றும் 10ஆம் தேதி இந்தியாவின் தலைநகரான டெல்லியில் 18வது G20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சீனா அரசாங்கத்தின் சார்பாக பிரதமர் லீ கியாங் பங்கேற்பார் என தெரிவித்துள்ளார். மேலும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஏன் பங்கேற்கவில்லை என்பதற்கான காரணங்கள் ஏதுவும் தெரிவிக்கப்படவில்லை.
சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்த வாரம் ஜகார்த்தாவில் நடைபெறுகின்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு (ASEAN) மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாடுகளையும் தவிர்த்துள்ளார். இந்தோனேசியாவில் நடைபெற உள்ள ASEAN மாநாட்டில் சீனாவின் பிரதிநிதியாக பிரதமர் லீ கியாங் கலந்து கொள்கிறார்.
இந்தோனேசியாவின் அதிபர் ஜோகோ விடோடோ அழைப்பிதழின் அடிப்படையில் ஜகார்த்தாவில் செப்டம்பர் 5 முதல் 8ஆம் தேதி வரை நடைபெறும் 26வது ASEAN மாநாடு, 26 வது ASEAN PLUS THREE (APT) மாநாடு மற்றும் 18வது கிழக்கு ஆசிய உச்சி மாநாடு ஆகியவற்றில் சீன பிரதமர் லீ கியாங் கலந்து கொள்வார் என சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் மற்றொரு செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் செப்டம்பர் 1ஆம் தேதி தெரிவித்தார்.