தைபே: தைவானுக்கு 345 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகளை அமெரிக்கா அறிவித்து உள்ள நிலையில், தைவானை வெடிமருந்துக் கிடங்காக அமெரிக்கா மாற்றி உள்ளதாக சீனா குற்றம் சாட்டி உள்ளது. சீனா, தைவான் நாட்டை உரிமை கொண்டாடி வரும் நிலையில், அமெரிக்க ராணுவ உதவி அளிக்க முன்வந்து உள்ளதை கண்டித்து, சீனாவின் தைவான் விவகார அலுவலகம், ஜூலை 29ஆம் தேதி, அறிக்கையை வெளியிட்டு உள்ளது.
இதுதொடர்பாக, தைவான் விவகார அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் சென் பின்ஹுவா வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, "இந்த விவகாரத்தில், தைவான் பிரிவினைவாதப் படைகள் எத்தனை சாதாரண மக்களின் வரிப்பணத்தைச் செலவிட்டாலும், எத்தனை அமெரிக்க ஆயுதங்களைச் செலவழித்தாலும், தைவான் பிரச்சனையைத் தீர்க்கும் நமது உறுதிப்பாட்டில் ஒருபோதும் பின்வாங்கப் போவது இல்லை. நமது தாய்நாட்டை மீண்டும் ஒன்றிணைக்கும் உறுதியான விருப்பத்தை அசைக்க முடியாது.
அவர்களின் நடவடிக்கைகள் தைவானை ஒரு ஆயுத கிடங்கு மற்றும் வெடிமருந்து கிடங்காக மாற்றுவதாக உள்ளது. தைவான் ஜலசந்தியில் போர் அச்சுறுத்தலை உருவாக்கி, மோசமான சூழலை உருவாக்க வழிவகுக்கிறது" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் (PLA), சமீப காலமாக, தைவானை இலக்காகக் கொண்டு அதன் ராணுவ சூழ்ச்சி நடவடிக்கைகளை அதிகரித்து வருகிறது. தைவான் வான்வெளியில், தன் இருப்பை காட்ட போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களை தொடர்ந்து சீனா அனுப்பி வருகிறது.