தென்னாப்பிரிக்கா: பிரிக்ஸ் கூட்டமைப்பின் 15வது உச்சி மாநாடு தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் கடந்த 22ஆம் தேதி தொடங்கியது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராம்போசா, பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ சில்வா, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோர் கலந்து கொண்டனர். ரஷ்ய அதிபர் புதின் காணொளி வாயிலாகக் கலந்து கொண்டார்.
பிரிக்ஸ் மாநாட்டின் இரண்டாவது நாளான நேற்று(ஆகஸ்ட் 23) நடைபெற்ற கூட்டத்தில், பிரிக்ஸ் நாடுகளின் செயல்பாடுகள், பிரிக்ஸ் கூட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக, பிரிக்ஸ் கூட்டமைப்பை விரிவாக்கம் செய்வது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பிரிக்ஸ் கூட்டமைப்பை விரிவுபடுத்த இந்தியா முழு ஆதரவு அளிப்பதாகவும், பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள அனைத்து நாடுகளின் ஒத்துழைப்புடன் இந்த விரிவாக்கத்தை செய்யலாம் என்றும் பரிந்துரை செய்தார். அதேபோல், பிரிக்ஸ் கூட்டமைப்பை விரிவுபடுத்தும் நடவடிக்கைக்கு சீன அதிபர் ஜின்பிங்கும் ஆதரவு தெரிவித்தார். உலகளவில் பிரிக்ஸ் கூட்டமைப்பை வலுப்படுத்த, கூடுதலாக வளரும் நாடுகளை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜின்பிங் கூறினார்.
இதைத் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று நடைபெற்ற கூட்டத்தில் பிரிக்ஸ் விரிவாக்கம் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இக்கூட்டத்தைத் தொடர்ந்து பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர்.