வாஷிங்டன் (அமெரிக்கா): கடந்த அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலைத் தொடங்கியது. இதனையடுத்து, இஸ்ரேலும் தனது தாக்குதலைகளைக் கொடுக்க ஆரம்பித்தது. இதன் விளைவாக பொதுமக்கள் பலரும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். முக்கியமாக, எல்லைப் பகுதியான காசா நகர் முழுவதும் அழியும் சூழல் தற்போது உருவாகி உள்ளது. அங்கு வசித்த பலர், தங்களது உயிர், உடமைகள், உறவினர்கள் என பலவற்றை இழந்து உள்ளனர்.
எனவே, அவர்களுக்கு தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, அங்கு தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மேலும், மருத்துவ உதவிகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, இந்தியா, அமெரிக்கா உள்பட பல நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்தன. அதிலும், அமெரிக்கா ராணுவப் பொருட்களையும் வழங்கி உள்ளது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை (அக்.18) இஸ்ரேலுக்குச் செல்ல உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்பட இஸ்ரேலின் உயர்மட்ட அதிகாரிகள் உடன் நடத்தப்பட்ட 7 மணி நேரத்திற்கும் மேலான பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இதனை இன்று (அக்.17) அறிவித்தார். இதன் மூலம், இஸ்ரேலுக்குப் பின்னால் அமெரிக்கா வலுவாக உள்ளதாக காட்ட விரும்புகிறது என கருதப்படுகிறது.