டெல்லி :இந்தியா - ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையேயான "2+2" அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளுவதற்காக இந்தியா வந்து உள்ள ஆஸ்திரேலியா துணைப் பிரதமர் ரிச்சர்ட மார்லஸ், நாளை (நவ. 19) நடைபெறும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியை காண உள்ளார்.
ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது படி, "ஆஸ்திரேலியாவின் துணைப் பிரதமர் ரிச்சர்ட் மார்லஸ் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்வார் எனத் தெரிவித்துள்ளது. மேலும், திங்கட்கிழமை (நவ.20) நடைபெறவுள்ள அமைச்சர்கள் பேச்சு வார்த்தையில் ஆஸ்திரேலியா துணைப் பிரதமர் ரிச்சர்ட் மார்லஸ் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் பென்னி வோங் இந்தியா - ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையேயான பேச்சு வார்த்தையில் கலந்து கொள்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையேயான 2 + 2 பேச்சுவார்த்தையில் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் இந்தியா சார்பாகத் தலைமை தாங்க உள்ளனர். மேலும் ஆஸ்திரேலியா துணைப் பிரதமரும் பாதுகாப்புத் துறை அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ் இந்தியா வருகை குறித்து இன்று (நவ.18) அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையேயான இரண்டாவது 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தை ஆகும். இதில், ஆஸ்திரேலியா துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ் உடன் இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இணைந்து தலைமை தாங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.